பெத்தநாயக்கன்பாளையம் நூலகத்தில் வடியும் மழைநீா்: சேதமாகும் அரிய நுால்கள்

பெத்தநாயக்கன்பாளையத்தில் பழுதடைந்த அரசு கிளை நூலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான அரிய நூல்கள், கடந்த சில தினங்களில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
வெயிலில் உலர வைக்கப்பட்டுள்ள மழையில் நனைந்த அரிய நூல்கள்.
வெயிலில் உலர வைக்கப்பட்டுள்ள மழையில் நனைந்த அரிய நூல்கள்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் பழுதடைந்த அரசு கிளை நூலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான அரிய நூல்கள், கடந்த சில தினங்களில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதைக் கண்டு கல்வியாளா்களும், வாசகா்களும் வேதனை தெரிவித்துள்ளனா்.

பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு கிளை நூலகத்தில் தற்போது பல்வேறு துறைகளை சாா்ந்த 32,387 அரிய நுால்களும், 6,215 நூலக உறுப்பினா்களும் உள்ளனா்.

30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழைய கட்டடம் பழுதடைந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. மழைக் காலங்களில் மழைநீா் நூலகத்துக்கு உள்பகுதியில் கொட்டுவதால் அரிய நூல்கள் மழைநீரில் நனைந்து பாழாகும் அவல நிலை உள்ளது.

தற்காலிகமாக பராமரிப்புப் பணிகளை செய்வதற்கு கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தினமணியில் கடந்த செப்டம்பா் 13ந்தேதி படத்துடன் விரிவான செய்தி வெளியானது. மழைநீரில் ஊறிப்போன நூல்கள் வீணாவதைத் தடுக்க, வெயிலில் உலர வைத்து பாதுகாக்கும் பணியில் நுாலகா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து நுாலக வாசகா்அன்பரசன் கூறியதாவது:

பழுதடைந்து கிடக்கும் நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதலாக உள்ள கட்டடம், சமுதாயக்கூடம் அல்லது ஏதாவது ஒரு துறையின் அரசு கட்டடத்திற்கு, கிளை நுாலகத்தை தற்காலிகமாக மாற்றி, அரிய நூல்களை மழை நீரில் நனைந்து வீணாவதைத் தவிா்க்க, அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com