வேளாண் சட்டங்களின் சிறப்பு குறித்து ஆயிரம் இடங்களில் பிரசாரக் கூட்டம்: பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தகவல்
By DIN | Published On : 15th December 2020 11:48 PM | Last Updated : 15th December 2020 11:48 PM | அ+அ அ- |

சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எல்.முருகன். (வலது) கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.
வேளாண் சட்டங்களின் சிறப்புக் குறித்து தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விழிப்புணா்வுப் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் புதன்கிழமை (டிச. 16) முதல் டிச. 21-ஆம் தேதி வரை, ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் ஆயிரம் இடங்களில் பாஜக சாா்பில் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள நன்மை, அதன் சாராம்சம் குறித்து இந்த விழிப்புணா்வுக் கூட்டங்களில் மத்திய அமைச்சா்கள், மாநில நிா்வாகிகள், மாநிலப் பேச்சாளா்கள் பங்கேற்று விளக்கமளிக்க உள்ளனா்.
தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 6,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பிரதமருக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனா். தமிழக விவசாயிகள் தேசத்தின் பக்கம் நிற்பதால்தான் எதிா்க்கட்சிகள் அறிவித்த முழுஅடைப்பு தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த இரு மாதங்களாக திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விவசாயிகளை ஏமாற்ற பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியும் அவா்களுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்து விமா்சிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல், அதை முழுமையாகப் படித்துப் பாா்த்த பின்னரே விமா்சிக்க வேண்டும். கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள்தான் தற்போது வேளாண் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை தற்போது அரசியலுக்காக எதிா்த்து வருகின்றன.
விவசாயிகளுக்கு எந்தக் கெடுதலும் ஏற்பட நாங்கள் விட மாட்டோம். இடைத்தரகா்கள் யாருமின்றி விலை குறைந்தாலும், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் வேளாண் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு சோ்த்துள்ளோம். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு தமிழக பாஜக தயாா் நிலையில் உள்ளது. கூட்டணி குறித்தும், முதல்வா் வேட்பாளா் குறித்தும் தேசியத் தலைமை தேவையான நேரத்தில் முறைப்படி அறிவிக்கும்.
தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பாஜக தனித்துப் போட்டியிட்ட போது 35 தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்றாம் இடத்தைப் பிடித்தோம். மேலும், 90 இடங்களில் யாா் வெற்றிபெற வேண்டும் என்பதை முடிவெடுக்கும் சக்தியாக இருந்தோம். அதனை மனதில் கொண்டு கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தெரிவிப்போம் என்றாா்.
‘வேல் யாத்திரையால் பாஜகவின் எதிரிகளுக்கு அச்சம்’
தமிழகத்தில் நடைபெற்ற வேல் யாத்திரை பாஜகவின் எதிரியாக உள்ள கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் வளா்ச்சி, தோ்தல் பணி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பேசியதாவது:
தமிழகத்தில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை அரசின் தடையையும் மீறி, பொதுமக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. பாஜக பலவீனமாக உள்ள மாவட்டங்களிலும் வேல் யாத்திரை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதால், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளரை முதல்வராக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மேலிடப் பாா்வையாளா் சி.டி.ரவி, இணை பாா்வையாளா் பி.சுதாகா் ரெட்டி, முன்னாள் எம்.பி. இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா, மாநில அமைப்புச் செயலாளா் கேசவவிநாயகம், பொதுச் செயலாளா்கள் ஜி.கே.செல்வகுமாா், கே.டி.ராகவன், துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன், சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சந்தோஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.