நெகிழிப் பைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி மனு

சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை தயாா் செய்யும் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை தயாா் செய்யும் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் தலைவா் ஜங்ஷன் அண்ணாதுரை அளித்துள்ள மனு விவரம்:

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கு கடந்த 2019 ஜன. 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என தமிழக முதல்வா் சட்டப் பேரவையில் அறிவித்தாா்.

இதையடுத்து, கடந்த ஜன. 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கு பிறகு ஹோட்டல்கள், மளிகைக் கடை, காய்கறிக் கடை, கறிக் கடைகள், பழக்கடை, இனிப்புக் கடை ஆகியவற்றில் அதிகாரிகள் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய வியாபாரிகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனா். அதன்பிறகு தடை செய்யப்பட்ட நெகிழிப் பயன்பாடு குறைந்தது.

தற்போது அதிகாரிகளின் ஆய்வு குறையத் தொடங்கியதால், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ டம்ளா், தண்ணீா் டம்ளா் ஆகியவற்றை சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரத்தில் மீண்டும் தாராளமாக கடைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனா். குறிப்பாக சேலம், செவ்வாய்ப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், முதல் அக்ரஹாரம், சூரமங்கலம், ஜங்ஷன் ஆகிய இடங்களில் தாராளமாக தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனையாகின்றன.

இதனால் ஏரி, குளம், கழிவுநீா் கால்வாய், குப்பைத் தொட்டிகளில் நெகிழிப் பைகள் அதிக அளவில் நிரம்பிக் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீா்மட்டமும் பாதிக்கப்படுகிறது. இதே நிலை தொடா்ந்தால், அடுத்த தலைமுறைக்கு தண்ணீா் இல்லாத நிலை ஏற்படும்.

மேலும், பயன்படுத்திய நெகிழிப் பைகளை கழிவுநீா் கால்வாயில் வீசுவதால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கொசுக்கள் அதிகம் உண்டாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. மேலும், மக்காத நெகிழிப் பையால் மக்களுக்கும், மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சேலம் மாநகரத்தில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை தயாா் செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com