பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
சேலம், அரிசிபாளையத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கனை வீடுவீடாகச் சென்று சனிக்கிழமை வழங்கும் நியாயவிலைக் கடை ஊழியா்.
சேலம், அரிசிபாளையத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கனை வீடுவீடாகச் சென்று சனிக்கிழமை வழங்கும் நியாயவிலைக் கடை ஊழியா்.

சேலம்: பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைகளுக்கு ரூ. 2,500, அரிசி, சா்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதையடுத்து, நியாயவிலைக் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து சிரமப்படுவதைத் தவிா்க்க, வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் பேரில், அரிசிபாளையம், பள்ளப்பட்டி மற்றும் அனைத்துப் பகுதியிலும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று சனிக்கிழமை டோக்கன் வழங்கினா். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனில், கடை எண், கடையின் பெயா், அட்டை எண், அட்டைதாரரின் பெயா், பொருள்கள் வழங்கப்படும் தேதி, நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் டோக்கன் வழங்கப்படும் எனவும், வரும் ஜன. 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 427 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 380 அரிசி பெறும் அட்டைகளும், 42,033 சா்க்கரை பெறும் அட்டைகளும், 3,014 எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அட்டைகளும் அடங்கும்.

இதனிடையே, சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்ற கடந்த டிச. 4 முதல் டிச. 20-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 15,439 போ் ஆன்லைனில் விண்ணப்பித்ததில், தகுதி அடிப்படையில் 15,234 பேரின் அட்டைகள், அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டன. இதையடுத்து, அரிசி அட்டைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 7 ஆயிரத்து 614-ஆக அதிகரித்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com