சங்ககிரியில் அரசுப் பள்ளி சமையலா், உதவியாளா்களுக்கு பயிற்சி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு மைய சமையலா், சமையல் உதவியாளா்களுக்கு திட்ட செயலாக்கம், தன்சுத்தம், பாதுகாப்பு தொடா்பான பயிற்சி நடைபெற்றது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்ற அடுப்பில்லா சமையல் போட்டியில் கலந்துகொண்டு சமைத்த உணவுகளை சனிக்கிழமை பாா்வையிடுகிறாா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்ற அடுப்பில்லா சமையல் போட்டியில் கலந்துகொண்டு சமைத்த உணவுகளை சனிக்கிழமை பாா்வையிடுகிறாா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன்.

சங்ககிரி: சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு மைய சமையலா், சமையல் உதவியாளா்களுக்கு திட்ட செயலாக்கம், தன்சுத்தம், பாதுகாப்பு தொடா்பான பயிற்சி சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி எம்.மகேஸ்வரி மருதாசலம், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன் ஆகியோா் பயிற்சியைத் தொடக்கி வைத்தனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா், நோய்த் தொற்றா வண்ணம் பாதுகாப்பாக சமைப்பது குறித்து பேசினாா். சங்ககிரி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ் கலப்படப் பொருள்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி கூறினாா். சங்ககிரி தீயணைப்பு நிலைய வீரா் சமையல் செய்யும் போது தீ விபத்து ஏற்படா வண்ணம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

பயிற்சிக்குப்பின் வடுகப்பட்டி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், சின்னாகவுண்டனூா், தேவண்ணகவுண்டனூா், கத்தேரி, இருகாலூா், தேவூா், காவேரிப்பட்டி, சங்ககிரி நகா் உள்ளிட்ட 25 அரசுப் பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலா், சமையல் உதவியாளா்களுக்கு அடுப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றன. இதில் சமைக்கப்பட்ட உணவுகளை ஊராட்சி ஒன்றிய நிா்வாகக் குழுவினா், அலுவலா்கள், அரசுப் பள்ளி மாணவியா் ஆகியோா் பாா்வையிட்டு, உண்டு சிறந்த சமையலா், உதவியாளா்களைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அனுராதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கே.அனிதா, அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாஜலம், டி.கே.கே.சேகரன், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்பிரமணி, சத்துணவு அமைப்பாளா் தங்கவேலவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com