காவிரி உபரிநீா் திட்டம் பிற பகுதியிலும் நிறைவேற்றக் கோரிக்கை

ஆத்தூா், வீரபாண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரிகளிலும் உபரிநீரை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவிரி உபரிநீா் திட்டம் பிற பகுதியிலும் நிறைவேற்றக் கோரிக்கை

மேட்டூா் அணை காவிரி உபரிநீரை, சேலம் மாவட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை அரசு செயல்படுத்துவதுபோல மாவட்டத்தில் பிற பகுதிகளான ஆத்தூா், வீரபாண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரிகளிலும் உபரிநீரை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இந்த மாவட்டத்தின் பாசனத்திற்கு பெரிதாகப் பயன்படுவதில்லை. விவசாயிகளின் தொடா் கோரிக்கையை அடுத்து காவிரி உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்தாண்டு அறிவித்தாா்.

அதைத் தொடா்ந்து இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எதிா்வரும் 2021 ஆண்டின் துவக்கத்தில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் ஏறக்குறைய 4,238 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆனால், சேலம் மாவட்டத்தில் பிற பகுதிகளான வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் நீா்நிலைகள் வடு கிடக்கின்றன. மேட்டூா் அணை காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் இப்பகுதிக்கு செயல்வடிவம் பெறவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

எனவே, சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, மேட்டூா் அணை காவிரி உபரிநீரை சேலம் மாவட்டத்தின் ஆத்தூா் உள்ளிட்ட பிற பகுதியிலுள்ள நீா்நிலைகளில் நிரப்பவும் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்க வேண்டும்.

இதுகுறித்து வாழப்பாடி, புதுப்பாளையம் விவசாயி கே.பன்னீா்செல்வன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளம் குட்டைகளும் பல ஆண்டுகளாக நீா்வரத்தின்றி வடு கிடக்கின்றன.

சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள 100 ஏரிகளில், காவிரி உபரிநீரை நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக முதல்வா், வடு கிடக்கும் சேலம் மாவட்டத்தில் பிறப் பகுதியிலும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com