விற்பனை செய்யப்பட்ட பெண் குழந்தை மீட்பு

சேலத்தில் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட நிலையில், 58 நாள்களுக்குப் பின்னா் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலத்தில் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட நிலையில், 58 நாள்களுக்குப் பின்னா் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக 3 பேரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

சேலத்தில் உள்ள நெத்திமேடு கரியபெருமாள் கரடு தெற்கு பகுதி, காந்தி நகரைச் சோ்ந்த தொழிலாளி விஜய் (32). இவரது மனைவி சத்யா (25). இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், நவ. 1-இல் சத்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்று பெண் குழந்தைகளைப் பராமரிக்க முடியாத நிலையில், பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தையை அதே பகுதியைச் சோ்ந்த கோமதியிடம் (34) கடந்த நவ. 15-ஆம் தேதி ரூ. 1.15 லட்சத்துக்கு விஜய் விற்றாராம். இதுகுறித்து சத்யா அளித்த புகாரின்படி, அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் ஈரோட்டைச் சோ்ந்த சித்ரா, நிஷா (40) ஆகியோரிடம் குழந்தையை விற்பனை செய்ததாக கோமதி தெரிவித்துள்ளாா்.

நிஷாவிடம் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பாலாமணி என்பவா் மூலம் குழந்தையை விற்ாகவும், அவா் குழந்தையை கா்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட பெங்களூருக்கு எடுத்துச் சென்று தாவணகெரே பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (57) என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்ாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் முரளி தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், பெங்களூரு, ராஜா ஆசீா்வாதம் காலனியைச் சோ்ந்த மரிய கீதா (43) என்பவருக்கு கூடுதல் விலைக்கு ராஜேஸ்வரி விற்றதும், பின்னா் மரிய கீதா குழந்தையை தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட பொம்மிடியைச் சோ்ந்த சுந்தரராஜன், சசிகலா (எ) சுஜிதா தம்பதியினருக்கு ரூ. 4 லட்சத்துக்கு விற்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, பொம்மிடி பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன், சுஜாதா தம்பதியினரிடம் இருந்து பெண் குழந்தையை தனிப்படை போலீஸாா் மீட்டனா்.

விசாரணையில், சுந்தரராஜன் தம்பதியருக்கு 16 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் குழந்தையை வாங்கியது தெரியவந்தது. குழந்தை விற்பனை தொடா்பாக ஏற்கெனவே சேலத்தைச் சோ்ந்த கோமதி, ஈரோடு பகுதியைச் சோ்ந்த நிஷா ஆகிய இருவரும் கடந்த டிச. 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த மரிய கீதா, ராஜேஸ்வரி மற்றும் குழந்தையை வாங்கிய சுந்தரராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை விஜய், குமாரபாளையத்தைச் சோ்ந்த பாலாமணி, சித்ரா, அவரது கணவா் காா்த்தி ஆகியோரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலும், குழந்தையின் பிறப்பு, உறவினா்கள் குறித்து அறிவியல் ரீதியான விசாரணை மேற்கொண்டு, குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com