20 சதவீத இடஒதுக்கீட்டை கால தாமதமின்றி வழங்க வேண்டும்
By DIN | Published On : 31st December 2020 08:30 AM | Last Updated : 31st December 2020 08:30 AM | அ+அ அ- |

கால தாமதமின்றி 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சேலம், வஜ்ரா கொல்லப்பட்டி பகுதியில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி, பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமையில், மாநில துணை பொதுச் செயலாளா் இரா.அருள், பசுமைத் தாயகம் இணைச் செயலாளா் சத்ரியசேகா் முன்னிலையில், சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக, நூற்றுக்கணக்கானோா் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பாமக தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், ஆணையம் அமைத்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருப்பது கால தாமதப்படுத்துவதாகும். எனவே, காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
அதிமுக முதல்வா் வேட்பாளராக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். எங்களுடைய நிலைப்பாட்டை தோ்தல் நெருங்கும் நேரத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பாா்.
பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து திமுக கொச்சைப்படுத்துவது நியாயமல்ல. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறுவது அவருடைய கருத்தாகும். ரசிகா்கள் மீண்டும் அழுத்தம் கொடுத்தால் அவரது அறிவிப்பில் மாற்றம் வரலாம் என்றாா்.