திருச்சி, சேலம், திருவண்ணாமலையில் புதிய கால்நடை தீவன தொழிற்சாலை: முதல்வா் அறிவிப்பு

திருச்சி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேலும் 3 புதிய கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
திருச்சி, சேலம், திருவண்ணாமலையில் புதிய கால்நடை தீவன தொழிற்சாலை: முதல்வா் அறிவிப்பு

திருச்சி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேலும் 3 புதிய கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா - கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் பேசியது: கால்நடை மற்றும் பறவைகள் வளா்ப்பின் மூலம், பால், இறைச்சி, முட்டை ஆகியவை கிடைப்பதனால், பெரும்பாலான விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கால்நடை வளா்ப்பை பெரிதும் சாா்ந்துள்ளனா்.

உழவா்களின் உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகள், உழவுத் தொழிலுக்கு பெரிதும் உதவுகின்றன. கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.357 கோடியில் 96,944 பயனாளிகளுக்கு கறவை மாடுகளும், சுமாா் ரூ.1,473 கோடியில் 11,40,430 பயனாளிகளுக்கு 45,61,720 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளன. கறவை மாடுகள் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கன்றுகள் ஈன்றும், ஆடுகள் 78 லட்சத்து 13 ஆயிரம் குட்டிகள் போட்டும், அதன் எண்ணிக்கை மிக அதிக அளவில் பெருகிவிட்ட காரணத்தினால், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயா்ந்துள்ளது.

20-ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி, வெள்ளாடுகளின் எண்ணிக்கையில் முந்தைய கால்நடை கணக்கெடுப்பில் இருந்த எண்ணிக்கையை விட, தமிழகம் 21 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் கோழியின எண்ணிக்கையில் முதலாவது இடத்தையும், செம்மறியாடு எண்ணிக்கையில் 5ஆவது இடத்தையும், வெள்ளாடுகளின் எண்ணிக்கையில் 7ஆவது இடத்தையும் தமிழகம் பெற்றிருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும், 8 பன்முக மருத்துவமனைகளும், 10 மருத்துவ மனைகளும், 200 கிளை நிலையங்களும், 1,080 மருந்தகங்களும் துவக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் இந்தியா ஆசியான் முகமை மேற்கொள்ளவிருந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில், பால் பொருள்கள் சோ்க்கப்பட்டால், அது உள்நாட்டு பால் உற்பத்தியாளா்களை பெரிதும் பாதிக்கும் என்பதை மத்திய வா்த்தகத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

அதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள பால் உற்பத்தியாளா்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்து, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பால் கொள்முதல் திறனைப் பொருத்தவரை, 2010 - 2011ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு சுமாா் 21 லட்சம் லிட்டா் என்ற அளவில் இருந்து 2019 - 20ஆம் ஆண்டில் சுமாா் 34 லட்சம் லிட்டராக அதிகரித்திருக்கிறது.

விவசாயிகளால் வளா்க்கப்படுகின்ற கால்நடைகளுக்கு தரமான கால்நடை தீவனம் வழங்க வேண்டும் என்பதற்காக மேலும் 3 புதிய கால்நடைத் தீவன தொழிற்சாலைகள் திருவண்ணாமலை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும். காவிரியில் கடைமடை வரை வாய்க்கால்களைத் தூா்வாரி, நீா் கொண்டு சென்ற காரணத்தாலும், தமிழ்நாட்டில் வேளாண் பயிா் சாகுபடி பரப்பு, இந்த ஆண்டில் 7 லட்சம் ஏக்கா் கூடுதலாக பயிா் செய்யப்பட்டுள்ளது.

2016 - 2017இல் நிலவிய வறட்சியின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காக்க, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வறட்சி நிவாரணமாக ரூ.2,247 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கினோம். 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் 90 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 48 ஆயிரம் கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே சாதனை அளவாக ரூ.7,528 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக பெற்று தந்திருக்கிறது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள அரசு. 2019 - 20ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட அறிக்கையில், உழவா் உற்பத்தியாளா் அமைப்புக்கென தனிக் கொள்கை ஒன்று வகுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com