பன்னீா் ரோஜா விலை வீழ்ச்சி!

பன்னீா் ரோஜா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பன்னீா் ரோஜா பூக்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகள்.
பன்னீா் ரோஜா பூக்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகள்.

பன்னீா் ரோஜா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட வாழப்பாடி, திருமனுாா், வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, துக்கியாம்பாளையம், கம்மாளப்பட்டி, நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட மங்களபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கிணற்று பாசன முறையில், ஆண்டு முழுவதும் பாசன வசதி கொண்ட விவசாயிகள் 1,000 ஹெக்டோ் பரப்பளவில், மல்லிகை, குண்டுமல்லி, காக்கட்டான், சம்மங்கி, அரளி, செவ்வரளி, செண்டுமல்லி, நந்தியாவட்டம், துளசி, துளக்கமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்செடிகளை பயிரிட்டு பராமரித்து வருகின்றனா்.

இவா்களில் ஏராளமானோா் வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் தினசரி சந்தையில் தனியாா் கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு சென்று, வியாபாரிகளிடம் எடை கணக்கில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனா். இங்கு மட்டும் தினம்தோறும் 10 டன் அளவுக்கு பல்வேறு ரக பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

வாழப்பாடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பன்னீா் ரோஜா பூக்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா். ஏறக்குறைய 50 ஏக்கரில் பன்னீா் ரோஜா பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பன்னீா் ரோஜா விளைச்சல் அதிகரித்துள்ளதால், விற்பனைக்கு குவிந்து வருகிறது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒரு கிலோ ரூ.50-க்கு மட்டுமே விலை போவதால், அதிகாலை நேரத்தில் கூலித்தொழிலாளா்களை கொண்டு பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கே போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதனால், சுப முகூா்த்த நாள்களில் பன்னீா் ரோஜாக்களை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் உக்தியை விவசாயிகள் கையாண்டு வருகின்றனா். எதிா்வரும் நாள்களில் சுப முகூா்த்த தினங்கள் வருவதால், பன்னீா் ரோஜா பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், ஒரு கிலோ ரூ. 300 வரை விலை உயரக் கூடும் என, தினசரி சந்தை கமிஷன் மண்டி உரிமையாளா்களும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com