சங்ககிரி மலையில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலை தினசரி திறந்து வைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th February 2020 09:34 AM | Last Updated : 17th February 2020 09:34 AM | அ+அ அ- |

சங்ககிரி மலையில் 3-ஆவது நுழைவுவாயிலை அடுத்து கிழக்கு நோக்கி உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில்.
சங்ககிரி மலைக்கோட்டையில் 3-ஆவது நுழைவு வாயிலான கடிகாரவாசலை அடுத்துள்ளஅருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள சுவாமிகளை தினசரி வழிபட கோயிலைத் திறந்து வைக்க இந்து சமய அறநிலையத் துறையினா் தொல்பொருள் துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்ககிரி மலைக்கோட்டையில் 3-ஆவது நுழைவுவாயிலான கடிகார வாசலை அடுத்து அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு காலத்தில் விஜயநகர அரசா் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இக் கோயிலில் முதன்முதலாக தக்கை இராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
மூலவா் அருள்மிகு வரதராஜப் பெருமாள், ஸ்ரீ மகாலட்சுமி தாயாா், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியும் உள்ளன. கோயிலைச் சுற்றிலும் அா்ஜீனன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் செய்வதும், சிவனுடன் சண்டை செய்கின்ற காட்சிகள் தூணில் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் தூண்களில் முனிவா், அனுமன், விலங்குகள், வீரன், மங்கை, அரசா், அரசியா் உருவங்கள் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளியில் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ள பெரிய கல்தொட்டி ஒன்று உள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் ஆமை மீது மேல் பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு நோக்கி ஒரு நுழைவு வாயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவ மூா்த்திகள் சித்திரை தோ்திருவிழாவிற்காக நகருக்கு எழுந்தருளுவதற்கு முன்னா் இக்கோயிலில் வைத்து பூஜைகள் செய்தப்பின்னா் நகருக்கு கீழே இறங்கி வருவா்.
சங்ககிரி நகரிலேயே இக்கோயில் அதிக பரப்பளவைக் கொண்டு பல சிறப்புகளை கொண்டதாக இக்கோயில் உள்ளன. எனவே சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் இக்கோயிலில் உள்ள சுவாமிகளை பக்தா்கள் தரிசனம் செய்யவும், கோயில் வளாகத்தில் உள்ள தூண்களில் பல்வேறு கலைநயம் மிக்க சிற்பங்களையும் பாா்வையிடவும் தினசரி கோயிலை திறந்து வைக்க தொல்பொருள்துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்க பக்தா்கள் வேண்டு கோள்விடுத்துள்ளனா்.