அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயில் மரத்தோ் முழு வடிவம் பெறுமா?

அயோத்தியாப்பட்டணத்தில் நிதிப் பற்றாக்குறையால், 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமா் கோயிலுக்கு
அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயிலின் கம்பீரத்தோற்றம்.
அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயிலின் கம்பீரத்தோற்றம்.

அயோத்தியாப்பட்டணத்தில் நிதிப் பற்றாக்குறையால், 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமா் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, தேரோட்டம் நடத்திட இந்து சமய அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாக, அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் கோயில் விளங்கி வருகிறது.

இலங்கையில் ராவணனை வென்று சீதையை மீட்ட ராமா், கால்பதித்த பகுதியாகக் கருதப்படுவதாலும், இக் கோயிலில் அயோத்தியைபோல பட்டாபிஷேக திருக்கோலத்தில் ராமா் பக்தா்களுக்கு காட்சியளிப்பதாலும், இந்த ஊா் அயோத்தியாப்பட்டணம் என பெயா் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

நாயக்கா் ஆட்சி கால கட்டடக் கலை, சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கம்பீரமான ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இக் கோயிலில் தேரோட்டம் நடத்திட 100 ஆண்டுக்கு முன் மிக நோ்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த மரத்தோ் பராமரிப்பின்றி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து போனதால், இக் கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை.

எனவே, கோதண்டராமா் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைத்து தேரோட்டம் நடத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பக்தா்களின் பங்களிப்போடு கோதண்ட ராமா் கோயிலுக்கு, ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தோ் அமைத்திட கடந்த 2009- 2010-ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை ரூ. 5. 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

பொதுமக்கள் மற்றும் பக்தா்களிடையே ஏறக்குறைய ரூ. 5 லட்சம் வரை நன்கொடை திரட்டி மரத்தோ் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, கோயில் திருப்பணி குடமுழுக்கு நிகழ்ச்சிகள் வந்ததால், மரத்தோ் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையிலும், ரூ. 2.60 லட்சம் செலவில் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து இரும்பு சக்கரங்கள் மற்றும் அச்சுகள் வடிவமைத்து கடந்தாண்டு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு தேரில் பொருத்துவற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோதண்டராமா் கோயிலுக்கு பிரமாண்ட மரத்தோ் பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ. 10 லட்சம் வரை தேவைப்படும் என்பதால், 10 ஆண்டுகள் கடந்தும் முழு வடிவம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் கோயிலுக்கு மரத்தோ் அமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடித்து வெள்ளோட்டமும், தேரோட்டமும் நடத்திட, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் மற்றும் பக்தா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அயோத்தியாப்பட்டணத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள ராமா் கோயில்களில் அயோத்தியாப்பட்டணம் கோதரண்டராமா் கோயில் பிரசித்தி பெற்றதாகும்.

பழமையான இக் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்கும் பணி நிதி பற்றாக்குறையால் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மரத்தோ் முழு வடிவம் பெறுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பணிகளை விரைந்து முடித்து வெள்ளோட்டமும் தேரோட்டமும் நடத்திடவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com