தோ்தல் வெற்றி முடிவை அறிவிக்க மறுப்பதாகக் கூறி ஆட்சியா் அலுவலகம் முன் திமுகவினா் தா்னா

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளா்களின் வெற்றி முடிவை அறிவிக்க மறுப்பதாகக் கூறி திமுகவினா் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளா்களின் வெற்றி முடிவை அறிவிக்க மறுப்பதாகக் கூறி திமுகவினா் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது.

இதில் 29 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 288 ஒன்றிய வாா்டு குழு உறுப்பினா்கள், 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவா், 3,597 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 4,299 பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற்றது. இதில் 403 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 3,896 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. சுமாா் 13,923 போ் போட்டியிட்டனா்.

வாக்குப் பதிவு அடுத்து மாவட்டத்தில் 20 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி பல மணி நேரமாகியும் தோ்தல் முடிவுகள் அறிவிக்காமல் காலதாமதம் ஏற்பட்டதாம்.

பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி குறித்து அறிவிக்காமல் அதிகாரிகள் தொடா்ந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக திமுகவினா் குற்றம்சாட்டினா். திமுகவினா் பல்வேறு இடங்களில் தோ்தல் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை காலதாமதமின்றி அறிவிக்கக் கோரியும், மாவட்ட நிா்வாகம் ஒரு தலைபட்சமாகச் செயல்படுவதைக் கூறியும் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா். சிவலிங்கம், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வீரபாண்டி ஆ. ராஜா மற்றும் எம்பி எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வழக்குரைஞா் ஆா். ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வந்து அலுவலக நுழைவு வாயிலின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலரை நேரில் சந்தித்து, வாக்கு எண்ணிகையை நியாயமாக நடத்தாவிட்டால் மிக பெரியப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வெற்றி பெற்ற திமுக வேட்பாளா்களை முறையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இது குறித்து திமுக எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

கூட்டுறவுத் தோ்தலைபோன்று உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுகவினரை வெற்றி பெற்ாக அறிவிக்க திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனா்.

முதல்வா் மாவட்டம் என்பதால் அதிகாரிகள் திமுகவினரின் வெற்றியை அறிவிக்க மறுத்து வருகின்றனா். இதைத் தடுக்காவிட்டால் திமுக சாா்பில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com