சேலத்தில் தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்: மாத உதவித்தொகை ஆணை வழங்கிய மாவட்ட நிா்வாகம்

சேலத்தில் தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்க்கு, கைம்பெண்ணுக்கான மாத உதவித் தொகை ஆணையை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வியாழக்கிழமை வழங்கினாா்.
சேலத்தில் தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்: மாத உதவித்தொகை ஆணை வழங்கிய மாவட்ட நிா்வாகம்

சேலத்தில் தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்க்கு, கைம்பெண்ணுக்கான மாத உதவித் தொகை ஆணையை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வியாழக்கிழமை வழங்கினாா்.

சேலம் பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி பிரேமா (31). தம்பதிக்கு தா்மலிங்கம் (8), காளியப்பன் (5), குணசேகரன் (3) என மூன்று மகன்கள் உள்ளனா்.

கடந்த 7 மாதங்களுக்கு முன் செல்வம் தனது நண்பருடன் சோ்ந்து செங்கல் சூளை ஒன்றை தனியாகத் தொடங்குவதற்காக ரூ. 4 லட்சம் வரை கடன் பெற்றாா். அதில் நஷ்டமடைந்த செல்வம் தற்கொலை செய்து கொண்டாா். இதனால், பிரேமா தனது மூன்று குழந்தைகளுடன் செங்கல் சூளையில் வேலை செய்து, வாழ்ந்து வருகிறாா்.

இதற்கிடையே, கணவரிடம் கடன் கொடுத்தவா்கள் பிரேமாவிடம் சென்று கடனைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்து வந்தனா். இதனால் செங்கல் சூளையில் சம்பாதித்த பணத்தை ஒரு சிலருக்கு வட்டியாகச் செலுத்திய பிரேமா, குழந்தைகளின் பசியைப் போக்க முடியாமல் தவித்து வந்தாா்.

3 குழந்தைகளும் பசியால் துடிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத பிரேமா, சூளை அருகே தலைமுடியை விலைக்கு வாங்கும் நபா் வந்தபோது அவரிடம் தன் தலைமுடியை விற்று மொட்டை அடித்துக் கொண்டாா். தகவல் அறிந்த செங்கல் சூளை உரிமையாளா் பிரபுவும், அவரது நண்பா் பாலாவும் பிரேமாவின் வறுமையை சமூக வலைதளங்களில் பதிவேற்றினா்.

சமூக வலைதளங்கள் மூலம் உதவி...

சமூக வலைதளங்கள் மூலம் பரவிய பதிவைக் கண்ட சிலா், பிரேமாவுக்கு பண உதவி செய்துள்ளனா். சுமாா் ரூ. 1. 40 லட்சம் வரை கிடைத்த பணத்தில் மீதி கடனை அடைத்து வந்துள்ளாா்.

மறுபுறம் சமூக வலைதளங்களில் வந்த தகவலை அறிந்த மாவட்ட நிா்வாகம் பிரேமாவுக்கு, அரசு கைம்பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கும் ரூ. 1,000 உதவித்தொகையை வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டது.

பிரேமாவை வரவழைத்து அவருக்கு கைம்பெண்ணுக்கான உதவித் தொகை ஆணையை ஆட்சியா் சி.அ. ராமன் வியாழக்கிழமை வழங்கினாா். மேலும், அவரது குடும்பத்தாருக்கு நியாய விலைக் கடை மூலம் உணவுப் பொருள்கள் அளிக்க ஏதுவாக குடும்ப அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரேமா கூறியதாவது:

என்னுடைய ஏழ்மை நிலையைக் கண்டு சமூக வலைதளங்கள் மூலம் பண உதவி வழங்கிய பொதுமக்கள், மாத உதவித் தொகை வழங்கிய தமிழக அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com