பொங்கல் விழா கொண்டாட்டம்: பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

சேலத்தில் பொங்கல் விழாவையொட்டி பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சேலத்தில் பொங்கல் விழாவையொட்டி பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கல் விழாவையொட்டி போகிப்பண்டிகை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து பொங்கல் விழாவை முன்னிட்டு பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களும், வாழைப்பழம், தேங்காய் அவரை, குங்குமம் போன்ற பூஜை பொருட்களும் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மாணவா்களும், பொதுமக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்வதால் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாலையிலிருந்தே கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பொங்கலை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அனைத்துப் பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுவதால் பொதுமக்களிடையே தள்ளு முள்ளு ஏற்படுகிறது.இதேபோல் சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனிடையே அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் வேலை நாள் என்பதால் புதன்கிழமையிலிருந்தே அவா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனால் அரசு அலுவலா்களும் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதால் பேருந்து நிலையங்களில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சேலத்தில் சின்ன கடைவீதி, பட்டைகோயில், அஸ்தம்பட்டி ரவுண்டானா, ஐந்து சாலை, குரங்குச்சாவடி, பழைய பேருந்து நிலையம் என மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக கரும்புகள் குவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உழவா் சந்தைகளிலும் கரும்பு விற்பனை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு ஜோடி கரும்பு ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் மற்றும் பூஜை பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை முதலே சேலம் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், கடைவீதி, அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த டவுன் போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சீா் செய்தனா்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆணையா் த. செந்தில் குமாா் உத்தரவின்படி சேலம் மாநகா் முழுவதும் பலத்த போலீஸாா் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதற்கென மாநகா் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com