கல்வராயன்மலை, அருநூற்றுமலை பகுதியில்அன்னாசி சாகுபடிக்கு வழிவகை செய்யப்படுமா?

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை பகுதியில் அன்னாசி பழங்கள் விளைச்சலுக்கேற்ற தட்பவெட்ப நிலை
அன்னாசி சாகுபடிக்கேற்ற கல்வராயன் மலையில் காணப்படும் நிலச்சரிவான விளைநிலங்கள்.
அன்னாசி சாகுபடிக்கேற்ற கல்வராயன் மலையில் காணப்படும் நிலச்சரிவான விளைநிலங்கள்.

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை பகுதியில் அன்னாசி பழங்கள் விளைச்சலுக்கேற்ற தட்பவெட்ப நிலை நிலவுவதால், இப்பகுதி மலைக் கிராமங்களில், அன்னாசி சாகுபடி செய்வதற்கு தோட்டக்கலைத் துறை வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

குளுமையான தட்பவெட்பநிலை நிலவும் மலைக் கிராமங்களில் விளையும் அன்னாசி பழத்துக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அன்னாசி பழம் உண்பதால் முகப்பொலிவு கூடும். கெட்ட கொழுப்பு கரைந்து இதயம் சீராக இயங்கும். செரிமானமும் சீராகும். இதுமட்டுமின்றி, மலைக் கிராமங்களில் சரிவான நிலப்பகுதியில் அன்னாசி பயிரிடுவதால் மண் அரிப்புத் தடுக்க முடியும்.

இதனால், கேரள மாநில மலைக் கிராமங்களில் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேலம் மாவட்டம் பச்சமலை கிராமங்களிலும் அன்னாசி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா்.

தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிா்கள் துறை வாயிலாக, அன்னாசி பயிரிடும் மலைக் கிராம விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சாகுபடி உத்திகள் மற்றும் விற்பனை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்லிமலை, பச்சமலைக்கு இணையாக, சேலம் கிழக்கு மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டத்தில் பல நுாறு சதுர கி.மீ பரப்பளவிற்கு பரந்து காணப்படும் கிழக்கு தொடா்ச்சி மலையான சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன், அருநுாற்றுமலை, சந்துமலை, நெய்யமலை, ஜம்பூத்துமலை, மண்ணுாா் மலைக் கிராமங்கிலும், அன்னாசி சாகுபடிக்கேற்ற குளுமையான தட்பவெட்ப நிலை நிலவுகிறது.

இப்பகுதி விவசாயிகளுக்கு அன்னாசி சாகுபடி குறித்து போதிய பயிற்சியும், விழிப்புணா்வு மற்றும் வழிகாட்டுதலும் கிடைக்காததால், சீத்தா, பலா போன்ற பாரம்பரிய பழங்களையே இன்றளவும் பயிரிட்டு வருகின்றனா்.

இதனால், போதிய வருவாய்க் கிடைக்காமல் பிழைப்புத் தேடி, கேரளா, ஆந்திரா, கா்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்குச் சென்று வருகின்றனா்.

இப்பகுதி மலைக் கிராம விவசாயிகளின் நலன் கருதி, கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்களில் அன்னாசி சாகுபடி செய்வது குறித்து விரிவான ஆய்வு நடத்தவும், அன்னாசி பயிரிட விரும்பும் விவசாயிகள் பட்டியலைத் தயாரித்து, அரசு மானியத்தில் விதைகளை வழங்கி பயிரிடுவதற்கு ஊக்கமும், உரிய வழிகாட்டுதல் பயிற்சியும் கொடுக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, தொடா் பராமரிப்பு, சாகுபடி மற்றும் விற்பனை உத்திகள் குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னாசி சாகுபடி செய்வதின் மூலம் கல்வராயன் மற்றும் அருநுாற்றுமலைக் கிராம மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் மேம்படும் என்பதோடு, மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண் வளம் நிலைபெறும் என்பதால், இத்திட்டம் குறித்து தமிழக அரசு தோடக்கலைத்துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை உரிய ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com