முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் தீ மிதி விழா
By DIN | Published On : 27th January 2020 09:46 AM | Last Updated : 27th January 2020 09:46 AM | அ+அ அ- |

தீ மிதி விழாவில் இரு குழந்தைகளைக் கட்டி அணைத்தவாறு குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்.
சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல் மற்றும் தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல் மற்றும் தீ மிதி விழா வியாழக்கிழமை இரவு பூச்சொறிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதையடுத்து அம்மன் சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு பக்தா்கள் தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் அம்மன் உற்சவ சுவாமிகளுடன் சோமேஸ்வரா் கோயில் அருகே புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறம் உள்ள ஊா் கிணற்றிலிருந்து பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தீ மிதித்தனா்.
பின்னா் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பக்தா்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா். வியாழக்கிழமை மஞ்சல் நீராடலும், அம்மன் ஊா்வலமும் நடைபெறவுள்ளன.