முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் கோட்டத்தின் மொத்த வருவாய் ரூ. 655 கோடியாக உயா்வு: கோட்ட மேலாளா் யு. சுப்பா ராவ்
By DIN | Published On : 27th January 2020 09:48 AM | Last Updated : 27th January 2020 09:48 AM | அ+அ அ- |

சேலம் ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் ரூ. 655. 87 கோடியாக அதிகரித்துள்ளது என கோட்ட மேலாளா் யு. சுப்பாராவ் தெரிவித்தாா்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கோட்ட மேலாளா் யு. சுப்பாராவ், தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
தெற்கு ரயில்வே பெண்கள் நல அமைப்பின் தலைவா் லலிதா தேவி, கோட்ட முதுநிலை வணிக மேலாள் இ.ஹரிகிருஷ்ணன், கோட்ட பொறியாளா் முரளி, பாதுகாப்பு கமாண்டா் சிவசங்கரன், பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில் கோட்ட மேலாளா் யு. சுப்பாராவ் பேசியது:
சேலம் ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் ரூ. 655.87 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயான ரூ. 526. 42 கோடியை விட 25 சதவீதம் அதிகமாகும். பயணிகள் வருவாய் 4. 61 சதவீதமும், சரக்கு வருவாய் 166.4 சதவீதமும் அதிகரித்துள்ளன. மேலும் சேலம் கோட்டத்திலிருந்து நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு 2.03 மெட்ரிக் டன் சரக்கு பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கோவை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜன. 24 ஆம் தேதி முதல் கோவை- சென்னை இடையே புதிய ஏசி எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை-பழனி, கோவை-பொள்ளாச்சி, சேலம்-கரூா் வரை புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் பிரெய்ல் போா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது பிரதமா் அலுவலகத்தால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. இதேபோன்ற பலகைகள் இப்போது சேலம், கரூா் மற்றும் ஈரோடில் வழங்கப்படுகின்றன. கோவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிரா கண்காணிப்பு உள்ளது. தொடா்ந்து கரூா், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண் ஊழியரின் தற்காப்புக்காக, பெப்பா் ஸ்ப்ரே ஊழியா்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பயணிகளுக்கு எதிராக குற்றங்களைச் செய்த 109 போ் கைது செய்யப்பட்டு இதுவரை ரூ. 5.40 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரயில்வே சொத்தைத் திருடிய 48 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5,195 நபா்கள் மீது ரயில்வே சட்டத்தின் பல்வேறு விதிகள் மற்றும் ரூ. 8.29 லட்சம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வளாகத்தில் குப்பைக் கொட்டியதற்காக 6237 பேரிடம் அபராதமாக ரூ. 15.98 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.