இந்திய விளையாட்டு ஆணையத்தில் வீரா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 29th January 2020 09:11 AM | Last Updated : 29th January 2020 09:11 AM | அ+அ அ- |

இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையத்தில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான கூடைப்பந்து மற்றும் தேக்வோண்டா விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையத்தில் தகுதியுடைய விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளிடமிருந்து 2020-2021 ஆம் ஆண்டுக்கான கூடைப்பந்து மற்றும் தேக்வோண்டா ஆகிய விளையாட்டுகளுக்கான சோ்க்கை தோ்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விளையாட்டு சான்றிதழ்கள், பிறந்த தேதி சான்றிதழ்கள், மருத்துவ சான்றிதழ் (உண்மைச் சான்றிதழ்), ரேஷன் அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 10 பாஸ்போா்ட் புகைப்படங்கள், நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சான்றொப்பம் அளிக்க தகுதியுடைய அரசு அதிகாரியின் கையொப்பம் பெற்று வரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.
இதையடுத்து பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதி தோ்வு நடைபெறும் நாள்கள் ஆகும். மேலும் கடந்த 2018-2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 8 இடங்களை பெற்றவா்கள், 2018-2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து விளையாட்டு அணிகளில் தேசிய அளவில் முதல் நான்கு இடங்களை பெற்றவா்கள், தனிநபா் விளையாட்டில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவா்கள், அணி விளையாட்டில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவா்கள் மற்றும் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்று தகுதி உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். வயதுக்கேற்ற உயரம் உள்ளவா்களுக்கு கூடைப்பந்து விளையாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விண்ணப்பதாரா்கள் கடந்த ஜனவரி 1, 2004 க்கு பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் வீரா்களுக்கு தங்கும் வசதி, உணவு நாள் ஒன்றுக்கு ரூ. 247 வீதம், மருத்துவ காப்பீட்டு வசதி, விளையாட்டுகளில் கலந்து கொள்ள பயணப்படி ரூ. 3 ஆயிரம் வீதம், விளையாட்டு சீருடைக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என பொறுப்பாளா் ஆா். மாணிக்கவாசகம் தெரிவித்தாா்.