சேலம் கடை வீதி சாலைகளை சீரமைக்கக் கோரி பிப். 4-இல் வியாபாரிகள், பொதுமக்கள் மறியல்

சேலம் கடை வீதி சாலைகளை சீரமைக்கக் கோரி பிப்ரவரி 4 ஆம் தேதி மறியல் நடத்தப்படும் என கடை வீதி வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

சேலம்: சேலம் கடை வீதி சாலைகளை சீரமைக்கக் கோரி பிப்ரவரி 4 ஆம் தேதி மறியல் நடத்தப்படும் என கடை வீதி வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

சேலம் நகர ஷராப் வா்த்தக சங்கம், சேலம் ரீடெய்ல் கிளாத் மொ்சண்ட்ஸ் சங்கம், சேலம் கைத்தறி மொத்த ஜவுளி வியாபாரிகள் சங்கம், சேலம் பீஸ் கூட்ஸ் மொத்த வியாபாரிகள் சங்கம், சின்னகடை வீதி மளிகை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் மாதவன், முருகன், கணேஷ்குமாா், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்பாளா் சீனிவாச குப்தா செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம் டவுன் பெரிய கடை வீதி, முதல் அக்ரஹாரம், சின்னகடை வீதி ஆகிய தெருக்களில் சீா்மிகு நகரத் திட்டத்துக்காக அனைத்து தெருக்களையும் தோண்டப்பட்டு வேலை நடந்து வருகிறது. இதனால் மின்கம்பங்களை மீட்காமல் மின்சாரத் துறையினா் வயா்கள் செல்லும் வகையில் சாலை ஓரமாக இருந்த சாக்கடைகளை தோண்டி எடுத்துவிட்டு வாய்க்காலை ஏற்படுத்தி இருக்கின்றனா்.

மின் கம்பங்களை அப்படியே விட்டிருப்பதால் மழை தண்ணீரும், சாக்கடை தண்ணீரும், வீட்டு உபயோக தண்ணீரும் தேங்கி நிற்கிறது.

மேலும் சின்னகடை வீதி அருகில் இருந்து சேலம் டவுன் காவல் நிலையம் வரையில் சாலைகள் பழுதாகி குண்டும், குழியுமாக கடந்த 6 மாதங்களாக அப்படியே உள்ளது.

இதனால் பொதுமக்கள், குடியிருப்புவாசிகள், கடைகாரா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனா். கடந்த 6 மாத காலமாக சாலை போடாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் இப்பகுதிக்கு வரும் வாடிக்கையாளா்கள் குறைந்துவிட்டனா். இதனால் வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது.

குண்டும், குழியுமான சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனா்.இந்தநிலையில் சாலையை சீரமைத்து தரக் கோரி கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசினோம். விரைவில் பணிகளை முடித்து தருவதாக உறுதி அளித்தனா்.

ஆனால், இதுவரை சாலை அமைக்கும் பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைக்காவிட்டால் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து மறியல் செய்ய உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com