தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவார ஊர்களில் இரைதேடிவரும் மயில்கள் - சரணாலயம் அமைக்கப்படுமா?

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே அதிகளவில் மயில்கள் உலாவரும் வாழக்கோம்பை, பிள்ளையார்மதி, சேரடி ஆகிய ஊர்களில் சிறிய அளவில் மயில்கள் சரணாலயம் அமைக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவார ஊர்களில் இரைதேடிவரும் மயில்கள் - சரணாலயம் அமைக்கப்படுமா?

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே அதிகளவில் மயில்கள் உலாவரும் வாழக்கோம்பை, பிள்ளையார்மதி, சேரடி ஆகிய ஊர்களில் சிறிய அளவில் மயில்கள் சரணாலயம் அமைக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் எல்லையாக தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி ஆகிய கொல்லிமலை அடிவாரக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி எப்போதும் பச்சை பசேன இருந்து வருகிறது. குளுமையான சூழலும் நிலவுகிறது. வாழக்கோம்பை செல்லும் வழியில் புலிக்கரடு உள்ளது. இங்கிருந்தும், கொல்லிமலை சாரலிலிருந்தும் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான மயில்கள் பறந்துவந்து, வாழக்கோம்பை காட்டுக்கொட்டாய், நேருநகர் காலனி, வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி போன்ற மலையடி கிராமங்களுக்கு வந்துசெல்கின்றன. அங்கு வயல்களில் சுற்றித்திரிந்து இரைகளை தேடுகின்றன. 

மேலும் நெல் வயல்கள், மக்காச்சோள வயல்களில் புகுந்து, நன்கு திரண்ட நெல்மணிகளையும், மக்காச்சோளக்கதிரையும் நன்கு அழகாக கொத்தி கொத்தி, தனக்கு இரையாக்கிக்கொண்டு பறந்துவிடுகின்றன. இது பல நேரங்களில் விவசாயிகளுக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல் மயில்கள், தம்மம்பட்டியிலிருந்து சேரடி செல்லும் சாலையின் குறுக்கே அடிக்கடி செல்கின்றன. அந்தவழியே கொல்லிமலைக்கு பல இரு, நான்கு சக்கரவாகனங்கள் செல்வதால், மயில்கள் விபத்திற்குள்ளாகுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே அவ்வப்போது எழுந்துவருகின்றன. ஆள்கள் நடமாட்டம் பத்து மீட்டர் தூரத்தில் இருந்தால்கூட, மயில்கள் வேகமாக பறந்துவிடுகின்றன.

அந்தளவிற்கு அவைகள் நுண்ணர்வுமிக்கதாக உள்ளன. இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, மயில்கள், அவைகளின் முட்டைகளை வயல்களிலேயே அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. அவைகள் பல நாள்கள் அப்படியே இருந்து வீணாகின்றன. எனவே, வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி ஆகிய மலையடிவார, குளுமையான கிராமங்களில் சின்னஞ்சிறிய அளவில் மயில்கள் சரணாலயம் அமைத்து பாதுகாக்கவேண்டும். வீணாகிப்போகும் மயில்களின் முட்டைகளையும் பாதுகாத்து மயில்களின் இனப்பெருக்கத்திற்கு உதவிடவேண்டும். இதற்கு வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும், இணைந்து மினி மயில்கள் சரணாலயத்தினை ஏற்படுத்தி, பயிர்களை மயில்களிடமிருந்து காப்பாற்றுவதுடன், மயில்களை பாதுகாத்திட வேண்டும் என்றனர்.

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் வாழக்கோம்பை ஊருக்கான ஊராட்சி வார்டு உறுப்பினர் சரவணன் கூறியதாவது, மலையடிவாரப்பகுதியில் மினி சரணாலயம் அமைக்கத்தேவையான இடம் உள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உதவிடவேண்டும் என்றார். இதுகுறித்து தம்மம்பட்டி வனச்சரக அலுவலர் அசோக்குமார் கூறியதாவது, வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி பகுதிகளில் மயில்களை பாதுகாக்க சரணாலயம் தொடர்பாக, நான் நேரில் ஆய்வு செய்து கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.

தம்மம்பட்டி மக்கள் இதுகுறித்து கூறியதாவது, வாழக்கோம்பை பகுதிகளில் மினி மயில்கள் சரணாலயம் அமைத்தால், அப்பகுதி சுற்றுலா பகுதியாகும். வெளியூர்களிலிருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்வது அதிகரிக்கும்.மாவட்ட நிர்வாகம், கொல்லிமலை அடிவார பகுதிகளில் மயில்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com