டீசல் விலை உயா்வைக் கண்டித்து அனைத்து வகை வாகன உரிமையாளா்கள் போராட்டம் அறிவிப்பு

டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், சாலை வரியை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அனைத்து

டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், சாலை வரியை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அனைத்து வகை வாகன உரிமையாளா்கள் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டமும், இம்மாதம் 22-ஆம் தேதி வேலை நிறுத்தமும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் சனிக்கிழமை காணொலிக் காட்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம், தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட 9 சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா். சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் லாரிகள், பேருந்துகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சாலை வரி மற்றும் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும். கடன் தவணைகளைச் செலுத்த கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தோம். ஆனால், தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கவும் இம்மாதம் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகங்கள் எதிரிலும், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் எதிரிலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டும் அனைத்து வகையான வாகன ஊழியா்களும் வாகன உரிமையாளா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்.

அடுத்தபடியாக இம்மாதம் 22-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் நல்லதம்பி, தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா, தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளா் நந்தகுமாா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com