சேலம்-சென்னை விமான நேரம் 3ஆவது முறையாக மாற்றம்
By DIN | Published On : 21st July 2020 12:19 PM | Last Updated : 21st July 2020 12:19 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சேலம்-சென்னை விமான புறப்பாட்டு நேரம் 3ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் பயணிகள் விமானம் தனியார் விமான நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் சென்னையிலிருந்து 9.50 மணிக்கு புறப்படும் விமானம் 10.50 மணிக்கு சேலம் வந்தடைந்தது. இதேபோல் 11.20 மணிக்கு புறப்படும் 12.20 -க்கு சென்னை சென்றடையும் வகையில் பயண நேரம் இருந்தது. இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த மே 27-ந்தேதி முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
அப்போது விமான புறப்பாட்டு நேரம் மாற்றப்பட்டு காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 8.25 மணிக்கு சேலம் வந்தடையவும், மீண்டும் 8.55 மணிக்கு புறப்பட்டு 9.55 மணிக்கு சென்னையை சென்றடையும் வகையில் பயண நேரம் மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சேலம்-சென்னை விமான சேவை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. திங்கள் கிழமை முதல் விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், விமான புறப்பாட்டு நேரம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.
நண்பகல் 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு சேலம் வந்தடையவும், மீண்டும் மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு 2.05-க்கு சென்னை சென்றடையும் வகையில் சேலம்-சென்னை பயணிகள் விமான சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்-ல் இருந்து விமானம் புறப்படுவதையொட்டி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தனியார் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.