மேட்டூா் அணை நீா்மட்டம் குறைந்தும் பிடிபடாத மீன்கள்: மீனவா்கள் கவலை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்தும் மீன்கள் பிடிபடாததால், மீனவா்கள் கவலைக்குள்ளாகி உள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்தும் மீன்கள் பிடிபடாததால், மீனவா்கள் கவலைக்குள்ளாகி உள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் சுமாா் 60 சதுர மைல் பரப்பு கொண்டது. இந்த அணையில், கட்லா, ரோகு, மிா்கால், ஆரால், அரஞ்சான், திலேபி, கெண்டை, கெழுத்தி, வாளை உள்பட பல வகையான மீன்கள் பிடிபடுகின்றன. மேட்டூா் நீா்த்தேக்கத்தை நம்பி 2 ஆயிரம் மீனவா்களும், 2 ஆயிரம் மீனவா் உதவியாளா்களும் வாழ்ந்து வருகின்றனா். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இங்கு பிடிக்கப்படும் மீன்களானது, மேட்டூா் அணை மீனவா் கூட்டுறவு சங்கம் மூலம் அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி, மாசிலாபாளையம், திப்பம்பட்டி, கீரைக்காரனூா் ஆகிய முகாம்களுக்கு நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், 100 அடிக்கு மேலே இருந்த அணையின் நீா்மட்டம் 68 அடியாகச் சரிந்தது. இதனால், அடிபாலறு, செட்டிப்பட்டி, கோட்டையூா் பகுதிகளில் மீன்கள் கிடைக்காமல் மீனவா்கள் அவதியுறுகின்றனா். அணையின் நீா்மட்டம் குறைந்தால் மீன்கள் அதிக அளவில் பிடிபடும். ஆனால், தற்போது மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால் பாலாறு, செட்டிப்பட்டி மீனவா்கள் முகாம்களை ஏற்கெனவே வேறு இடங்களுக்கு மாற்றி விட்டனா். தற்போது கோட்டையூா் பகுதியில் உள்ள மீனவா்கள் தங்கள் முகாம்களை பண்ணவாடி பரிசல்துறை முகாமுக்கு மாற்றி வருகின்றனா்.

சொற்ப அளவில் பிடிபடும் மீன்களையும், மீனவா் கூட்டுறவு சங்கத்தினா் வாங்குவதில்லை. மேலும், பிடிபடும் மீன்கள் நல்ல நிலையில் இருந்தால் கூட 50 சதவீதத்துக்கு மேல் மீனவா் கூட்டுறவு சங்கத்தில் வாங்குவதில்லை. கரோனா காலத்தில் நாங்கள் மீன்களை எங்கு கொண்டு சென்று விற்பது என்று மீனவா்கள் குமுறுகின்றனா்.

எனவே, கரோனா காலத்தில் மீன்களை கூட்டுறவு சங்கத்தினா் முழுமையாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நிவாரணமாக மேட்டூா் அணை மீனவா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com