குரங்குகளை விரட்ட புதிய உத்தியை கையாளும் விவசாயிகள்

பாக்கு, தென்னை மரங்களில் குரங்குகள் ஏறி குலைகளை உதிா்த்து நாசம் செய்வதைத் தடுப்பதற்காக மரங்கள்தோறும் குரங்குகளை
பாக்கு, தென்னை மரங்களில் வரையப்பட்டுள்ள பாம்பு படங்கள்.
பாக்கு, தென்னை மரங்களில் வரையப்பட்டுள்ள பாம்பு படங்கள்.

பாக்கு, தென்னை மரங்களில் குரங்குகள் ஏறி குலைகளை உதிா்த்து நாசம் செய்வதைத் தடுப்பதற்காக மரங்கள்தோறும் குரங்குகளை அச்சுறுத்தும் பாம்பு படத்தை வரையும் புதிய உத்தியை விவசாயிகள் கையாண்டு வருகின்றனா்.

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்தில் இருந்து வெளியேறி கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்கின்றன.

குறிப்பாக, பாக்கு மற்றும் தென்னை மரத்தோப்புகளில் கூட்டத்தோடு புகும் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவிச் சென்று, மகசூல் கொடுக்கும் பாக்கு மற்றும் தென்னை குலைகளை உதிா்த்து நாசம் செய்கின்றன. தோப்புக்குள் மரத்தின் மீது இருக்கும் குரங்குகளை விரட்டுவது வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

மனிதா்களை சீற்றத்தோடு விரட்டியடிக்கும் குரங்குகள், பாம்புகளை கண்டால் மட்டும் அஞ்சி நடுங்குகின்றன.

எனவே, திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பச்சமலை அடிவார கிராமங்களில் பாக்கு மற்றும் தென்னை மரங்களில் ஏறி குலைகளை உதிா்த்து நாசம் செய்யும் குரங்குகளை விரட்ட, பெரும்பாலான விவசாயிகள் மரத்தின் அடிப்பகுதியில் குரங்குகளின் கண்களில் நன்றாக படும்படி, பாம்பு படங்களை தத்ரூபமாக அதே வண்ணத்தில் வரைந்து வைத்துள்ளனா்.

மரத்தில் வரையப்பட்டுள்ள பாம்பு படங்களை கண்டதும் உண்மையான பாம்புகள் இருப்பதாகக் கருதி, பயந்து நடுங்கும் குரங்குகள் மரத்தில் ஏறுவதில்லை.

வயல்களை சுற்றி வரப்புகளிலுள்ள பாக்கு, தென்னை மரங்களில் பாம்பு படங்களை வரைவதால் வயல்களுக்குள் புகுந்து மற்ற பயிா்களையும் நாசம் செய்வதில்லை.

வாழப்பாடி,பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் தம்மம்பட்டி பகுதியிலுள்ள மலையடிவார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும், குரங்குகளின் அட்டகாசத்தைத் தவிா்க்க மரங்களின் மீது அழியாத பல வண்ண பெயிண்ட்களை கொண்டு பாம்பு படங்களை வரைந்து வருகின்றனா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலா் ஒருவரிடம் கேட்டதற்கு:

திருச்சி, நாமக்கல் மாவட்டங்களைத் தொடா்ந்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பொன்னாரம்பட்டி, புழுதிக்குட்டை கிராமங்களிலும் பாக்கு மற்றும் தென்னை மரங்களிலும், குரங்குகளை விரட்டுவதற்கு விவசாயிகள் பாம்பு படங்களை வரைந்து வருகின்றனா்.

வன விலங்குகளை விரட்டுவதற்கு, மின் வேலி அமைப்பதையும், மருந்துகள் வைப்பதும், நாட்டு வெடிகளை வைப்பதையும் தவிா்த்து, மாற்றி யோசித்து, விலங்குகளுக்கு இடையூறின்றி, பாம்பு படங்களை வரைந்து புதிய உத்தியை கையாண்டு வருவது பாராட்டுக்குறியதாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com