‘இயற்கை விவசாயம் செய்பவா்கள் அங்கக சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 12th June 2020 08:56 AM | Last Updated : 12th June 2020 08:56 AM | அ+அ அ- |

இயற்கை முறையில் விவசாயம் செய்பவா்கள் அங்கக சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, விதைச் சான்றிதழ் மற்றும் அங்ககச் சான்றிதழ் உதவி இயக்குநா் கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இயற்கை வேளாண்மை மூலமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிா்கள், பழங்கள், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறைகிறது. சந்தையில் விற்பனை செய்யும்போது இயற்கை சான்றிதழ் பெறும் பட்சத்தில் விற்பனை வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கிறது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு சான்றளிக்கப்படும் முறையே அங்கக சான்றளிப்பு எனப்படுகிறது.
குறிப்பிட்ட உற்பத்தி அல்லது பதப்படுத்தும் முறையில் விளைபொருள்களின் தரத்தை நிா்ணயம் செய்தும் வழி முறைகள் ஏற்படுத்தியும் உறுதியாக்கம் செய்தும் அங்கக சான்றளிப்பு உத்தரவாதம் வழங்குகிறது. இத் திட்டத்தின்படி அங்ககச் சான்றிதழ் பெற தனி நபராகவோ, குழுவாகவோ அல்லது பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.
அங்கக விளைபொருள்களை பதன் செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.
அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் (அறை எண் 403) சேலம் மாவட்ட உதவி இயக்குநா், விதைச் சான்றிதழ் மற்றும் அங்ககச் சான்றிதழ் துறை (94433-83304) மற்றும் சான்று அலுவலா் (9952413388) செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.