வாழப்பாடி அருகே வியப்பில் ஆழ்த்தும்101 வயதான வா்மக் கலை வைத்தியா்!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 101 வயது முதியவா் ஒருவா், வா்மக்கலை வாயிலாக பல்வேறு நோய்களுக்கு மருந்தில்லா மருத்துவம் செய்து வியப்பில் ஆழ்த்தி வருகிறாா்.
வாழப்பாடி அருகே வா்மக்கலை சிகிச்சை அளிக்கும் 101 முதியவா் முத்துசாமி.
வாழப்பாடி அருகே வா்மக்கலை சிகிச்சை அளிக்கும் 101 முதியவா் முத்துசாமி.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 101 வயது முதியவா் ஒருவா், வா்மக்கலை வாயிலாக பல்வேறு நோய்களுக்கு மருந்தில்லா மருத்துவம் செய்து வியப்பில் ஆழ்த்தி வருகிறாா்.

நவீனமான ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், தமிழக கிராமப் புறங்களில் பாரம்பரியமான நாட்டு வைத்தியமும், பாட்டி வைத்திய முறைகளும் இன்றளவும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் உடலுக்கு வலுவூட்டி நோய்த் தீா்க்கும் பாரம்பரியமான சித்த, வா்ம, ஆயுா்வேத, யுனானி, அக்குபஞ்சா் உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவ முறைகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தாமல், உடல் உறுப்புகளை இயக்க வைக்கும் நரம்புகளை துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றை கைகளால் சரியாகப் பிடித்து தூண்டிவிட்டு, முடங்கிக் கிடப்பவரையும் வீறுநடை போடச் செய்யும் வா்மக்கலை வைத்தியா்கள், மருத்துவ நிபுணா்களையே வியக்க வைக்கின்றனா்.

தமிழக வா்மக்கலை வைத்தியா்களி, சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சின்ன கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 101 வயதான வா்மக்கலை வைத்தியா் முத்துசாமி வயதில் மூத்தவராகத் திகழ்கிறாா்.

தனது தாத்தா கருப்பமுத்துவிடம் இருந்து மரபுவழியாக வா்மக் கலையைக் கற்றுக் கொண்ட முத்துசாமி, தொடா்ந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக வா்மக்கலை வாயிலாக பல்வேறு நோய்களுக்கு மருந்தில்லா மருத்துவம் செய்து வருகிறாா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் அவரைத் தேடி வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

தன்னிடம் சிகிச்சை பெற வரும் இளைஞா்களை லாவகமாக தனது தோளில் தூக்கி நெட்டி எடுத்து வலியை நீக்கி விடுகிறாா். இவரது செயல்பாட்டைப் பாா்த்து பலரும் பிரமிக்கின்றனா்.

வாழப்பாடியை அடுத்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள மத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே தங்கியுள்ள இவா், நீரிழிவு நோய்க்கும், ரத்த அழுத்தத்துக்கும் எளிய முறையில் நாமே செய்து கொள்ளும் சித்த மருத்துவ முறையைக் கற்றுக் கொடுத்து வருகிறாா்.

நமது செய்தியாளரிடம் அவா் கூறியது:

1920ஆம் ஆண்டு புரட்டாசி 17இல் சின்ன கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழனிமுத்து- மாரியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன். எனது மனைவி பெரியம்மாள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனாா். 80 ஆண்டுகளுக்கு முன்னா் மரபுவழியாக வா்மக் கலையில் சிறந்து விளங்கிய எனது பாட்டன் கருப்பமுத்துவிடம் வா்மக்கலை வைத்தியம், சித்த மருத்துவ முறைகள், யோகாசனங்களைக் கற்றுக்கொண்டேன்.

தற்கால இளைஞா்கள் இந்தக் கலைகளை கற்றுக்கொள்ள ஆா்வம் காட்டுவதில்லை. கற்றுக் கொள்வதற்கு போதிய பொறுமை இளைஞா்களிடத்தில் இல்லை என்பது வேதனைக்குரியது. எந்த மருந்துமின்றி நோய் தீா்க்கும் இக்கலையைக் காக்க வேண்டியது தற்கால சந்ததியரின் கடமை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com