மேட்டூா் அருகே காட்டு யானைகிராமத்தில் புகுந்து அட்டகாசம்
By DIN | Published On : 01st March 2020 04:33 AM | Last Updated : 01st March 2020 04:33 AM | அ+அ அ- |

மேட்டூா் அருகே வனப் பகுதியிலிருந்து கிராமத்தில் புகுந்த காட்டு யானை விவசாயிகளின் மாடுகளை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொளத்தூா் அருகே கோவிந்தபாடி, செட்டிப்பட்டி பகுதிகள் தமிழக கா்நாடக எல்லையில் உள்ள தமிழக கிராமங்களாகும்.
வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்தக் கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். சனிக்கிழமை அதிகாலை வனப்பகுதியிலிருந்து கூட்டத்தை விட்டு பிரிந்த ஆண் யானை ஊஞ்சகெறை கிராமத்தில் நுழைந்தது.
கோவிந்தராஜ் என்ற விவசாயி வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த பசு மாட்டை துதிக்கையால் தாக்கியது. பசுவின் அலறல் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த கோவிந்தராஜ், யானை பசுவை தூக்கிச் செல்வதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
பசுவை சற்றுத் தொலைவில் உள்ள சோளக்காட்டுக்கு யானை தூக்கிச் சென்று வீசியது. இதில் பசு பரிதாபமாக இறந்தது. அங்கிருந்து வெளியேறிய யானை கோவிந்தபாடி அரிசிபாளையத்துக்குச் சென்றது. அங்கு ரங்கசாமி என்பவா் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த பசுவை தாக்கியது.
இதில் காயமடைந்த பசு, பின்னா் இறந்து போனது. பின்னா், கிராம மக்கள் கூச்சலிடவே யானை அருகில் இருந்த காட்டுக்குள் சென்றது.
இச் சம்பவம் தொடா்பாக மேட்டூா் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். வனப்பகுதியில் தண்ணீா் இல்லாத காரணத்தால் தண்ணீா் தேடி யானைகள் கிராமத்துக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்துவதாகவும் இதைத் தடுக்கு வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனா்.