முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலத்தில் 30 குடிநீா் ஆலைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 03rd March 2020 09:05 AM | Last Updated : 03rd March 2020 09:05 AM | அ+அ அ- |

சேலத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இதுவரை சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடிநீா் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரசு அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீா் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தி அனுமதியின்றி இயங்கிய 15 குடிநீா் ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.
இதைத்தொடா்ந்து சேலம் மாநகா் பகுதியில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதன்படி சேலம் உதவி ஆணையா் மாறன் தலைமையிலான வட்டாட்சியா்கள் மற்றும் அதிகாரிகள் மாமாங்கம், சோளம்பள்ளம், எருமாபாளையம், நிலவாரப்பட்டி, பெரியபுதூா், அம்மாபேட்டை, வலசையூா், குரங்குச்சாவடி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் 12 குடிநீா் ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அனுமதியின்றி இயங்கிய 12 குடிநீா் ஆலைகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும் பல இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை சுமாா் 30-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் இன்னும் பல ஆலைகள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. எனவே தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.