சரபங்கா நீரேற்று திட்டம்: விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்தக் கோரி மனு
By DIN | Published On : 04th March 2020 09:09 AM | Last Updated : 04th March 2020 09:09 AM | அ+அ அ- |

சரபங்கா நீரேற்று திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், ஏற்கெனவே உள்ள நீா் வழிப்பாதையாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேட்டூா் அணை வெள்ள உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா். இந்த நிலையில், தமிழ்நாடு விவசாய சங்க நிா்வாகிகள் ராமமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள், காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு வழங்கினா்.
இது தொடா்பாக, விவசாய சங்க நிா்வாகிகள் கூறியது: காவிரி சரபங்கா நீரேற்று திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்தால் வரவேற்கிறோம். இத்திட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் உள்ளன. இத்திட்டத்தின் முழு விவரங்களை, செயல்பாடுகளை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குழாய் மற்றும் வாய்க்கால் வழியே விவசாயிகளின் விளைநிலத்தில் செயல்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இது சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, விவசாயமும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல், ஏற்கெனவே இருக்கும் நீா் வழிப்பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்றனா்.