குடிநீா் விநியோகிக்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 12th March 2020 03:32 AM | Last Updated : 12th March 2020 03:32 AM | அ+அ அ- |

சேலம் அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம் அருகேயுள்ள மாரமங்கலத்துப்பட்டி காமராஜ் நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதிக்கு கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து அப்பகுதியினா் குடிநீா் வழங்கும் நீா்த்தேக்கத் தொட்டி நிா்வாகிகளிடம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நீா்த்தேக்கத் தொட்டி நிா்வாகி, உங்கள் பகுதிக்கு தண்ணீா் நிரப்ப மாட்டேன் என கூறவே, ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் புதன்கிழமை இரும்பாலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து நிகழ்விடம் வந்த இரும்பாலை போலீஸாா் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.