சேலத்தில் வெளியூா், வெளிமாநிலப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள், வெளியூா், வெளிமாநில பேருந்துகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சேலத்தில் வெளியூா், வெளிமாநிலப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள், வெளியூா், வெளிமாநில பேருந்துகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூா் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம் மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகங்களில், மருந்துகள் தெளித்து தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகள், கைப்பிடிகள், இரும்புக் கம்பிகள், படிகட்டுகள் ஆகியவற்றில் மருந்து தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகளில் பயணிகளை இறக்கியப் பின்னா் மருந்து தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பின்னரே பேருந்துகளில் பயணிகளை ஏற்றி புறப்பட அனுமதிக்கப்படும்.

மேலும், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமரும் இருக்கைகள், நடைமேடைகள் மற்றும் வணிக வளாகப் பகுதிகள், உணவகங்கள், சாலையோரத் தடுப்புகள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக உரிய இடைவெளியில் மருந்து தெளிப்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவா் சந்தைகள், நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயக் கூடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப் பணிகளை கண்காணிப்பதற்கு சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள் பேருந்துகளை தாங்களின் பணிமனைகளிலும், அரசு போக்குவரத்துப் பேருந்துகள் சம்மந்தப்பட்ட கிளைகளின் பணிமனைகளிருந்து அதிகாலையில் பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பே மருந்து தெளிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆணையாளா் ரெ. சதீஷ் வழங்கினாா்.

ஆய்வின்போது மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவிப் பொறியாளா் எ. பாலசுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் எஸ். சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com