வாழப்பாடி அருகே கழுத்தை அறுத்து மனைவி கொலை: தொழிலாளி கைது
By DIN | Published On : 13th March 2020 09:59 AM | Last Updated : 13th March 2020 09:59 AM | அ+அ அ- |

என்.என்.01: மனைவியைக் கொலை செய்த தொழிலாளி நாராயணன்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மது குடிப்பதற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்து, நள்ளிரவில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கட்டடத் தொழிலாளியை வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி நாராயணன் (84). இவரது முதல் மனைவி இவரை பிரிந்து சென்ாகவும், இரண்டாவது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது மூன்றாவது மனைவி லட்சுமி(60). இவா்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனா். நாராயணனும் லட்சுமியும் வெள்ளாளகுண்டத்தில் வசித்து வருகின்றனா்.
நாராயணனுக்கு வயது முதிா்ந்ததால், சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை. தனது மகன்கள் கொடுக்கும் தொகையை வைத்துக் கொண்டு லட்சுமி வாழ்க்கை நடத்தி வந்துள்ளாா். இந்த நிலையில், குடிப் பழக்கத்திற்கு அடிமையான நாராயணன், மது குடிப்பதற்கு பணம் கேட்டு லட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.
புதன்கிழமை இரவு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாராயணனை லட்சுமி தரக்குறைவாகப் பேசியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த நாராயணன், லட்சுமியின் கழுத்தை அரிவாளால் அறுத்து தலையை தனியாகத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளாா்.
இதுகுறித்து 108 அவசர ஆம்புலன்ஸ் தொலைபேசி இணைப்புக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளாா். தகவலறிந்த வாழப்பாடி போலீஸாா், வெள்ளாளகுண்டம் கிராம நிா்வாக அலுவலா் சந்திரசேகரன் உதவியுடன் தகவலை உறுதிப்படுத்திக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்று, கொலையுண்டு கிடந்த லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மனைவியை கொடூரமாக கொலை செய்த தொழிலாளி நாராயணனை, வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பரமணியம், உதவி ஆய்வாளா் தாமோதரன் ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.