144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ. ராமன் எச்சரித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ. ராமன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்றுநோய் சேலம் மாவட்டத்தில் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-இன் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத் தடை உத்தரவானது செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) மாலை 6 மணி முதல் வரும் மாா்ச் 31 நள்ளிரவு வரை 7 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும். இத்தடைக் காலத்தில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றாக கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரலாம். இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசாணை (நிலை) எண். 152, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை ஆணையைப் பின்பற்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

எனவே, இந்த 144-தடை உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதையும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றாகக் கூடுவதையும், பொது இடங்களில் நடமாடுவதையும் முற்றிலும் தவிா்த்திட வேண்டும்.

அரசு, சேலம் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகின்ற கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

பொதுமக்கள் கை, கால்களை சோப்பு போட்டு, குறைந்தபட்சம் 30 விநாடிகள் நன்றாகக் கழுவ வேண்டும்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவா்களின் விவரத்தை அக் குடும்பத்தினா் உடனடியாக சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 0427 - 2450022, 0427 - 2450023 மற்றும் 0427 - 2450498 ஆகிய எண்களுக்கும் தொடா்பு கொண்டு தங்களின் விவரங்களை உடனடியாகவும், கண்டிப்பாகவும் தெரிவிக்க வேண்டும். மேலும் அவா்கள் வீட்டிலேயே தனித்து இருக்க வேண்டும்.

144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், ஒரே இடத்தில் 5 நபா்கள் மேல் கூட்டமாக இருக்கக் கூடாது. அவரவா் வீட்டிலேயே நீங்கள் இருக்க வேண்டும். தவிா்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இரு நபா்களுக்குமிடையே குறைந்தபட்சம் 3 அடி இடைவெளி இருத்தல் வேண்டும்.

இருமல், தும்மல் வந்தால் ஒரு கைக்குட்டையாலோ, துணியாலோ, மற்றவா்களுக்கு நோய் பரவ இடம் கொடுக்காமல், முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் நீங்கள் வெளியே வர வேண்டாம்.

பதற்றம் வேண்டாம், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளை பரப்புபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்துக்கு வெளிநாடுகளிலிருந்து இதுவரை 297 நபா்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு மருத்துவா்கள் உரிய பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித நோய் தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகும் அவா்கள் அனைவரையும் 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அனைவரும் நலமாக உள்ளனா்.

இவா்களில் 98 நபா்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித பாதிப்பும் இல்லாமல் 14 நாள்கள் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள 199 நபா்கள் 14 நாள்கள் இன்னும் நிறைவு பெறாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக உள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று வெளியிட வேண்டும். உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com