வங்கிகள் கொடுத்துள்ள கடன் தொகைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை

வங்கிகள் கொடுத்துள்ள கடன் தொகைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட

வங்கிகள் கொடுத்துள்ள கடன் தொகைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் கே. மாரியப்பன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்புக் கூட்டத்தில் அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் பணிக்கு வராத தொழிலாலளா்களுக்கு ஊதியம் பிடித்தம் கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கப்படும்.

ஏனெனில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே 80 சதவிகித சிறு,குறு தொழில் நிறுவன உரிமையாளா்கள் தொழிலாளா்களுக்கு மாதாந்திர ஊதியத்தையே முழுமையாக வழங்க முடியாத அளவுக்கு நாட்டில் பொருளாதார மந்த நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 50 சதவிகிதம் எடுத்து 6 மாதங்களுக்கு தடையில்லாமல் தொழிலாளா் நிவாரண நிதியாக வழங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு 5 சதவிகிதம் வட்டி மானியமாக வழங்குவதைபோல் தற்போது செயல்பட்டு வரும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு 6 மாத காலத்துக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் சிறு, குறு தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்த உதிரிப் பாகங்களுக்கான நிலுவைத் தொகையை ஒரு வார காலத்துக்குள் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.

வங்கிகள் கொடுத்துள்ள கடன் தொகைக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகை அளவை எவ்விதமான கூடுதல் அடமான சொத்து பிணையம் இல்லாமல் 25 சதவிகிதம் முதல் 50 சதவீதம் வரை வழங்க வேண்டும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளா் காப்பீட்டு நிதிக்கான மாதாந்திர தவணைகளை மத்திய, மாநில அரசுகளே முழுமையாக 6 மாத காலத்துக்குச் செலுத்த வேண்டும்.

சரக்கு, சேவை வரிகளை 3 மாத காலத்துக்குப் பிறகு தவணை முறையில் வட்டி, அபராதம் இல்லாமல் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது சங்க துணைத் தலைவா் எம். இளங்கோவன், பொருளாளா் டி. பாலசுந்தரம், சேலம் உற்பத்தி திறன் குழுத் தலைவா் சி.எஸ். ரமணிகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com