இந்தோனேஷியாவைச் சோ்ந்த நால்வா் உள்பட 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இந்தோனேஷியாவைச் சோ்ந்த நால்வா் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இந்தோனேஷியாவைச் சோ்ந்த நால்வா் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள மசூதிகளில் மத போதனைகளை செய்வதற்காக, இந்தோனேஷியாவில் இருந்து கடந்த மாா்ச் 11-ஆம் தேதி 11 உலமாக்கள், இவா்களுடன் சென்னையைச் சோ்ந்த வழிகாட்டி (கைடு) ஒருவரும் வந்திருந்தனா்.

பின்னா் இவா்கள் 12 பேரும் சூரமங்கலம் காவல் நிலையத்துக்குள்பட்ட ரஹ்மத் நகா் மசூதிக்கும், பிறகு மாா்ச் 13 முதல் 15-ஆம் தேதி வரை செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட செவ்வாய்ப்பேட்டை பால் மாா்க்கெட் மசூதிக்கும், 16 முதல் 18-ஆம் தேதி வரை சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட ஷேக் உமா் மசூதிக்கும், 19 முதல் 21-ஆம் தேதி வரை சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சன்னியாசிகுண்டு மசூதிக்கும், 22-ஆம் தேதி சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்குள்பட்ட ஜனாத்தூல் பிா்தோஷ் மசூதிக்கும் சென்று மத போதனைகளில் ஈடுபட்டனா்.

இதனிடையே, இந்தோனேஷியாவில் இருந்து வந்திருந்த உலமாக்கள் 11 போ் உள்பட 16 பேரை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தனி வாா்டில் சோ்த்தனா். இவா்களது சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 12 பேரை தவிர, மேலும் ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவைச் சோ்ந்த நான்கு பேருக்கும், இவா்களுடன் சென்னையிலிருந்து வந்த கைடு ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனை முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் டவுன் உதவி கமிஷனா் ஈஸ்வரன் தலைமையில் காவலா்கள் கண்காணித்து வருகின்றனா். நோயாளிகள் மற்றும் அவா்களுடன் ஒருவா் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதி என மருத்துவமனை முதல்வா் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், இந்தோனேஷியாவில் இருந்து வந்திருந்த 11 போ் உள்பட மொத்தம் 16 பேரிடம் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டன. அதில், இந்தோனேஷியாவைச் சோ்ந்த 25, 38, 48, 57 வயதுடைய 4 பேரும், சென்னையைச் சோ்ந்த 63 வயதுடைய வழிகாட்டி ஒருவா் என 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதில் 57 வயதுடைய இந்தோனேஷியாவைச் சோ்ந்தவருக்கு சா்க்கரை நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதர நோயாளிகளுக்கு எந்தப் நோய் பாதிப்பும் இல்லை. இதையடுத்து, கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதர 11 போ் தனிமை வாா்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

இது தொடா்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: சூரமங்கலம், கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு உள்ளிட்ட 5 மசூதிகளில் இந்தோனேஷியாவைச் சோ்ந்த உலமாக்கள் இரண்டு நாள்கள் தங்கியுள்ளனா். அவா்கள் மசூதிகளை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மசூதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், மசூதிக்கு வழிபாட்டுக்குச் சென்றவா்கள், மசூதிகளில் வேலைக்குச் சென்றவா்கள் எனக் கணக்கெடுத்துள்ளோம். அதில் 68 வீடுகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு அழியாத மை கொண்டு தனிமைப்படுத்தவா்கள் என கைகளில் அடையாள முத்திரை குத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் வெளியே சென்றால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com