மே, ஜூன் மாத பொருள்களை பெற இன்று முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்படும்: ஆட்சியா் சி.அ.ராமன்

சேலம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மே, ஜூன் மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு

சேலம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மே, ஜூன் மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உரிய டோக்கன்களை நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் சனிக்கிழமை முதல் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க உள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை சரிசெய்யும் நோக்கத்தோடு மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 இன்படி பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை / முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் ஒருவருக்கு 5 கிலோ வீதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து சேலம் மாவட்டத்துக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் 1327 மெட்ரிக் டன்களும் மற்றும் முன்னுரிமை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளுக்கு 11976 மெட்ரிக் டன்களும் கூடுதலாக அரிசி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. மேற்கண்ட ஒதுக்கீடு குடும்ப அட்டைதாரகளுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்களுக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்படும் 35 கிலோ அரிசியுடன் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நபா் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும்.

ஏப்ரல் மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படாததால் மே மாதத்தில் வழங்கப்படும் அரிசி அளவுடன் கூடுதலாக ஏப்ரல் மாதத்திற்கான அரிசியின் அளவில் 50 சதவீதம் மே மாதத்தில் 50 சதவீதம் ஜூன் மாதத்திலும் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய அரிசியின் அளவு ஏற்கெனவே விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் மே மாதத்திற்கு மே 4 முதல் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய ஏதுவாக சனி (மே 2) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) ஆகிய இரு தினங்களில் விற்பனையாளா்கள் வீடுதோறும் சென்று டோக்கன்களை வழங்க உள்ளனா்.

ஒரு நாளில் 150 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படவுள்ளது.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுச் செல்லலாம். அத்தியாவசியப் பொருள்களை பெற வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருள்களை வாங்க வேண்டும்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசியப் பொருள்கள் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அரிசி ஆகிய அனைத்து பொருள்களும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரே தவணையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com