ஆதரவற்றோருக்கான உணவு செலவை ஏற்ற புதுமண தம்பதி!

சேலத்தில் திருமணத்தில் உறவினர்களுக்கு விருந்து அளிக்க முடியாததால், ஆதரவற்றோருக்கான உணவு செலவை புதுமண தம்பதி ஏற்றுக்கொண்டனர்.
ஆதரவற்றோருக்கான உணவு செலவை ஏற்ற புதுமண தம்பதி!


சேலம்: சேலத்தில் திருமணத்தில் உறவினர்களுக்கு விருந்து அளிக்க முடியாததால், ஆதரவற்றோருக்கான உணவு செலவை புதுமண தம்பதி ஏற்றுக்கொண்டனர்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மூன்றாம் கட்டமாக மே 4 முதல் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சேலத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் தேசிய சேவா சமிதி சார்பில் மாநகரில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தினமும் மதிய வேளையில் ஆதரவற்றோர், ஏழை எளியோரின் பசியை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு இடத்திலும், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதனிடையே சேலம் வாசவி மஹாலில் ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது வின்சென்ட் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியான திலக்-நளினி ஆகியோர் வந்தனர். அவர்கள், தங்களது திருமணம் காலை நடந்ததாகவும், திருமணத்தில் உறவினர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. எனவே, தாங்கள் வழங்குகின்ற உணவுக்கான முழு செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என கூறி, செலவுத் தொகையை நிர்வாகிகளான பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.பி.கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, பொதுச் செயலாளர் சசிகுமார், வணிக பிரிவு தலைவர் அபிராமி முருகேசன், பிரவின் ஆகியோரிடம் வழங்கினர்.

பிறகு அவர்கள் கையால் உணவை பார்சல் செய்து ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளியோருக்கு வழங்க வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.

ஏழை, எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் திருமண விருந்து அளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக புதுமண தம்பதியர் தேசிய சேவா சமிதி நிர்வாகிகளிடம் தெரிவித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com