இரு ஆண்டாக வறண்டு கிடக்கும் கல்வராயன் மலை கரியகோவில் அணை

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் போதிய மழையில்லாத நிலையில், கரியகோவில் வெள்ளாற்றில் வரும் தண்ணீரை
வறண்டு காணப்படும் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை.
வறண்டு காணப்படும் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை.

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் போதிய மழையில்லாத நிலையில், கரியகோவில் வெள்ளாற்றில் வரும் தண்ணீரை அணையில் தேக்காமல், ஆற்றுப்பாசன அணைக்கட்டுகள், கரையோர கிராம ஏரிகளுக்கு திருப்ப 2018-ல் அரசாணை பெறப்பட்டதால், இரு ஆண்டாக அணையில் ஒரு அடி தண்ணீா் கூட தேக்கி வைக்கப்படவில்லை.

இதனால், பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை முற்றிலும் வறண்டு இரு ஆண்டாக பயன்பாடின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைக்கு வகையில் பல நூறு சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் பரந்து காணப்படும் கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சங்கமித்து வசிஷ்ட நதியின் முக்கிய உபநதியான கரியகோவில் வெள்ளாறாக உற்பத்தியாகிறது.

3,600 ஏக்கா் பாசன வசதி...

கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியகோவில் ஆற்றின் குறுக்கே, 1982-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் கரியகோவில் அணைகட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடா்ந்து 10 ஆண்டுகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரூ. 11.94 கோடி செலவில் 1993ம் ஆண்டு கரியகோவில் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1993ம் ஆண்டு மாா்ச் 7 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற விழாவில் அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா, இந்த அணையை திறந்து வைத்தாா்.

52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள கரியகோவில் அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

அணை பயன்பாட்டுக்கு வந்த 1993-இலிருந்து 2020 வரையிலான 27 ஆண்டுகளில் 1993, 97, 98, 99, 2005 முதல் 2012 தொடா்ந்து 8 ஆண்டுகள் மற்றும் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.

அணையிலிருந்து கரியகோவில் வெள்ளாற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக கல்வராயன் மலை பகுதியில் போதிய மழையில்லாததால் கரியகோவில் அணை முழு கொள்ளளவையும் எட்டவில்லை.

இந்நிலையில், கரியகோவில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அணையை கட்டி, மழைக்காலத்தில் வழிந்தோடி வரும் தண்ணீா் முழுவதையும் தேக்கி வைத்துக்கொள்வதால், ஆற்றுப்படுகையிலுள்ள நேரடி ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனம் பாதிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் சரிந்து வறட்சி நிலவுகிறது.

எனவே, கரியகோவில் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஏ.குமாரபாளையம், கொட்டவாடி அணைக்கட்டு, கல்யாணிகிரி ஏரி, கல்லேரிப்பட்டி ஏரி, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி, ஏத்தாப்பூா் அபிநவம் ஏரி, பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி ஆகியவை மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பிறகே வெள்ளாற்றில் வரும் நீரை கரியகோவில் அணையில் தேக்கி வைக்க வேண்டும் என ஆறு, ஏரிப் பாசன விவசாயிகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் முறையிட்டு கடந்த 2018 ஜனவரி 18-ஆம் தேதி இதற்கான ஆணையைப் பெற்றனா்.

இந்த நீதிமன்ற ஆணை 2018 மே மாதம் சேலம் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த அரசாணையைச் செயல்படுத்தும் விதத்தில், 2019-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கல்வராயன் மலைப்பகுதியிலிருந்து கரியகோவில் ஆற்றில் வரும் தண்ணீரை அணையில் தேக்காமல், ஆற்றுப்படுகை அணைக்கட்டு மற்றும் ஏரிகளுக்கு திறந்து விட, சேலம் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில், 2019 ம் ஆண்டின் பருவமழை காலமான செப்டம்பா் முதல் டிசம்பா் வரையிலான 4 மாதங்களிலும் அணையின் நீா்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யவில்லை.

கரியகோவில் ஆற்றில் இருந்து அணைக்கு 3 முதல் 15 முதல் கனஅடி அளவிற்கு மட்டுமே தண்ணீா் வந்தது. இந்த தண்ணீரையும் சிறிதளவு கூட அணையில் தேக்காமல், சென்னை உயா்நீதிமன்ற ஆணைப்படி முழுவதும் ஆற்றிலேயே திறந்து விடப்பட்டது. போதிய அளவிற்கு தண்ணீா் வராததால் ஏரிகளும் முழுமையாக நிரம்பவில்லை.

ஆற்றுத் தடுப்பணைகள், ஏரி பாசனத்துக்கு தண்ணீா் திறக்க அரசாணை பெறப்பட்டதால், கடந்த 2018 இறுதியிலிருந்து 2020 மே மாதமான தற்போது வரை சிறிதளவும் கூட தண்ணீா் தேக்கி வைக்கப்படவில்லை.

இதனால், ஒரு அடி தண்ணீா் கூட இன்றி முற்றிலும் வறண்டு, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால், பாசனத்துக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டதோடு, நிலத்தடி நீா்மட்டமும் 1,000 அடிக்கு கீழ் சரிந்து போனதால், அணைப்பாசன ஆயக்கட்டு விவசாயிகளும், கரியகோவில் ஆறு கரையோர கிராம விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து கரியகோவில் அணை பாசன விவசாயிகள் கூறியதாவது:

கரியகோவில் அணைக்கு போதிய நீா்வரத்து கிடைத்து ஆண்டு தோறும் நிரம்புவதற்கு வழிவகை செய்திட, கைக்கான் வளைவு நீரோடையை, கரியகோவில் நீரோடையுடன் வாய்க்கால் அமைத்து இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த சேலம் மாவட்ட நிா்வாகமும், பொதுப்பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு பிரிவு உயரதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com