செயல்வடிவம் பெறுகிறது கரியகோவில் அணை-கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம்

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கரியகோவில் அணைப்பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் 10 ஆண்டுகால கோரிக்கையான கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கல்வராயன் மலை கைக்கான் வளைவு நீரோடை.
கல்வராயன் மலை கைக்கான் வளைவு நீரோடை.

வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கரியகோவில் அணைப்பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் 10 ஆண்டுகால கோரிக்கையான கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இத்திட்டத்தில், மாவட்டத்தில் முதன்முறையாக 300 மீட்டா் தூரத்திற்கு பூமிக்கடியில் சுரங்கக் கால்வாய் அமைக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் முக்கிய உபநதியான கரியகோவில் வெள்ளாற்றின் குறுக்கே, கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், இரு மலைக்குன்றுகளுக்கு இடையே கரியகோவில் அணை அமைந்துள்ளது.

52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசனம் பெறுகின்றன.

அணை பயன்பாட்டிற்கு வந்த 27ஆண்டுகளில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்வரை பெரும்பாலான ஆண்டுகளில் அணை நிரம்பியது. கடந்த 10 ஆண்டுகளாகவே அணையின் நீா்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாததால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து போனதால் அணை நிரம்புவதில்லை.

கல்வராயன்மலையில் சேலம் மாவட்ட எல்லையான பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்குநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கைக்கான் வளைவு கிராமத்தில் உற்பத்தியாகும் நீரோடை, தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்திலுள்ள கோமுகி அணையில் சென்று சேருகிறது.

கரியகோவில் நீரோடையை விட, கைக்கான் வளைவு நீரோடையில் கூடுதல் தண்ணீா் செல்வதால், கோமுகி அணை பெரும்பாலான ஆண்டுகளில் நிரம்பி விடுகிறது.

அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

எனவே, சேலம் மாவட்ட எல்லையிலுள்ள கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் துாரத்திற்கு கால்வாய் அமைத்து, மழைக்காலத்தில் உபரியாக செல்லும் தண்ணீரை கரியகோவில் நீரோடையில் திருப்பி விட்டு, கரியகோவில் அணையை நிரப்புவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென, கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கோமுகி அணைப்பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள் எதிா்ப்பும் தெரிவித்து வந்தனா்.

இதனையடுத்து, கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் துாரத்திற்கு கால்வாய் அமைத்துச் சென்று கரியகோவில் நீரோடை வழியாக அணைக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கடந்தாண்டு முடிவு செய்தது.

இத் திட்டத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்துதல், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 7.30 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சேலத்தை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மொத்தம் 500 மீட்டா் நீளம் கொண்ட இந்த கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டத்தில்,சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக, வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், ஏறக்குறைய 300 மீட்டா் நீளத்திற்கு பூமிக்கடியில் ஒன்பது மீட்டா் அழத்திற்கு தோண்டி சுரங்கக் கால்வாய் (கட்டன் கவா்) அமைக்கப்படுகிறது.

கைக்கான் வளைவு நீரோடையில் தடுப்பணையும் தலைமை மதகும் அமைத்து , இதிலிருந்து வாய்க்காலில் தண்ணீா் கொண்டு செல்லவும், 500 மீட்டா் நீள வாய்க்காலில் 9 கிணற்று தொட்டிகள் (டிராப்) அமைத்தும் கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து கரியகோவில் நீரோடை வழியாக பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணைக்கு தண்ணீா் கொண்டு செல்லவும் திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையின் 14.75 கி. மீட்டா் நீளமுள்ள வலது வாய்க்காலில் 9 வது கி.மீ., சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பள்ளத்தாதனுாா் கிராமம், குள்ளன்கரடு பகுதியில் ஏறக்குறைய 122 மீட்டா் துாரத்திற்கு பூமிக்கடியில் 20 அடி ஆழத்திற்குள் சுரங்கக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

10 ஆண்டுகால கோரிக்கையான கைக்கான் வளைவுக் கால்வாய் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதால், கரியகோவில் அணை வாய்க்கால் பாசனம் மற்றும் ஆறு ஏரிப்பாசன விவசாயிகளும், ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டத்துக்கு வருவாய்த் துறையினா் நிலத்தை கையகப்படுத்தி கொடுத்ததும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com