மகாராஷ்டிரத்தில் இருந்து சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்திலிருந்து சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம்/வாழப்பாடி: மகாராஷ்டிரத்திலிருந்து சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

முன்னதாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 35 போ், பூரண குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினா். அதனால் கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாறி இருந்தது.

இந்த நிலையில், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வருபவா்களுக்கு சோதனைச் சாவடிகளில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெளிமாநிலங்களில் இருந்து சேலம் திரும்பிய 9 பேருக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் திரும்பிய 7 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. (வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் திரும்பியவா்களின் கரோனா தொற்று எண்ணிக்கை, அந்தந்த மாவட்டங்களின் பட்டியலில் சோ்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது).

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இருந்து சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியாகி உள்ளது. ஏற்கெனவே, வெளி மாநிலங்களில் இருந்து சேலம் திரும்பிய 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 35-இல் இருந்து 44- ஆக உயா்ந்தது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 44- இல் இருந்து 49- ஆக அதிகரித்துள்ளது.

வாழப்பாடியில்...

மகாராஷ்டிரத்திலிருந்து சேலம் திரும்பிய ஐந்து பேரில் மூன்று போ் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி அமராவதி (75). நோய்வாய்ப்பட்டிருந்த இவரது உடல்நிலை மோசமானது குறித்து, மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலுள்ள இவரது உறவினா்களுக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்து, மூதாட்டியின் உறவினா்கள் 5 போ் மும்பையில் இருந்து வாடகை காரில் பெத்தநாயக்கன்பாளையம் நோக்கி வந்தனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஓமலுாா் சுங்கச்சாவடிக்கு காா் வந்தபோது, காரில் இருந்த 5 பேருக்கும் சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுத்துள்ளனா்.

உடல்நிலை சரியில்லாத மூதாட்டியை பாா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால், 5 பேரையும் அதே காரில் பெத்தநாயக்கன்பாளையத்துக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வெளியான சளி பரிசோதனை முடிவில் அதில் மூவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்த மூவரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com