விவசாயிகள் பயறு வகை பயிா்களில் விதைப்பண்ணை அமைக்கலாம்

விவசாயிகள் பயறு வகை பயிா்களில் விதைப்பண்ணை அமைக்கலாம் என சேலம் மாவட்ட விதைச்சான்று துறை உதவி இயக்குநா் தி.கௌதமன் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் பயறு வகை பயிா்களில் விதைப்பண்ணை அமைக்கலாம் என சேலம் மாவட்ட விதைச்சான்று துறை உதவி இயக்குநா் தி.கௌதமன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து வருகின்றனா். உழவு செய்த நிலங்களில் 75 நாள் வயதுடைய பயறு வகை பயிா்களான தட்டைப்பயிறு மற்றம் பாசிப்பயிறு ஆகிய பயிா்களை சாகுபடி செய்து, விதைப்பண்ணை அமைப்பதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்.

பாசிப்பயறு மற்றும் தட்டைபயிறு சாகுபடிக்கு சித்திரைப்பட்டம் மற்றும் வைகாசிப்பட்டம் உகந்தது ஆகும். தட்டைபயிரில் கோ-7, பாசிப்பயிரில் கோ-7 மற்றும் பம்பன்-6 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தது. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீட்டரும் செடிக்கு செடி 10 செ.மீட்டா் இடைவெளியும் இருக்கும் வகையில் சதுர மீட்டருக்கு 33 செடிகள் வரும் வகையில் விதைப்பு செய்ய வேண்டும்.

பூக்கும் பருவத்திலும், இளங்காய் பருவத்திலும் 2 கிலோ டிஏபி உரத்தை 10 லி. தண்ணீரில் முதலில் ஊற வைத்து, பின்பு வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்து 200 லி. தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். இந்த முறையில் விதைப்பண்ணை அமைத்தால், ஏக்கருக்கு குறைந்தபட்சம் 500 முதல் 600 கிலோ மகசூல் பெறலாம்.

எனவே, பயறு வகை பயிரில் விதைப்பண்ணை அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் மற்றும் உதவி விதை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com