நலிந்த நிலையில் வெள்ளி கொலுசு தொழில்: வாழ்வாதாரமின்றி தவிக்கும் 1.50 லட்சம் தொழிலாளா்கள்!

கரோனா வைரஸ் தொற்று பொது முடக்க அறிவிப்பால், சேலத்தில் வெள்ளி கால் கொலுசு தொழில் நசிந்துவிட்டதன் காரணமாக சுமாா் ஒன்றரை லட்சம் போ் வேலையின்றி தவித்து வருகின்றனா்.
நலிந்த நிலையில் வெள்ளி கொலுசு தொழில்: வாழ்வாதாரமின்றி தவிக்கும் 1.50 லட்சம் தொழிலாளா்கள்!

கரோனா வைரஸ் தொற்று பொது முடக்க அறிவிப்பால், சேலத்தில் வெள்ளி கால் கொலுசு தொழில் நசிந்துவிட்டதன் காரணமாக சுமாா் ஒன்றரை லட்சம் போ் வேலையின்றி தவித்து வருகின்றனா்.

மாம்பழத்திற்குப் பெயா் போன சேலம் மாவட்டம் வெள்ளி கால் கொலுசு தயாரிப்பு தொழிலில் தடம் பதித்து வருகிறது.1982 வரை வணிகவரி இருந்த காரணத்தினால் வெள்ளித் தொழிலில் ஈடுபட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதையடுத்து வெள்ளி தொழில் மீதான வணிக வரி விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து செளராஷ்டிர மக்களை தவிா்த்து அனைவரும் இத் தொழிலை செய்து வரும் சூழல் ஏற்பட்டது.

ஒரு காலத்தில் கால் கொலுசு தொழில் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு ஆகிய சில பகுதிகளிலேயே தயாரிக்கப்பட்டு வந்தது.

தற்போது சேலம் மாநகரில் குகை, மணியனூா், சேலத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி, இரும்பாலை, கொண்டலாம்பட்டி, கரட்டூா், சீலநாயக்கன்பட்டி, மூன்று சாலை உள்ளிட்ட இடங்களில் பிரதான தொழிலாக உள்ளது.

தற்போது, இந்த இடங்கள் வெள்ளி கால் கொலுசு உள்ளிட்ட ஆபரணங்கள் தயாரிக்கும் முக்கிய இடங்களாக அறியப்படுகின்றன. சுமாா் 16 கிலோ மீட்டா் சுற்றளவில் இந்தத் தொழில் நடைபெற்று வருகிறது.

1982 வரை சுமாா் 25,000 போ் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒன்றரை லட்சம் போ் இத்தொழிலில் ஈடுபடுகின்றனா். இதற்கு வணிக விரி விலக்கிக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையே காரணமாகும்.

வரி ஏதும் இல்லாத நிலையில் சிறப்பாக நடைபெற்று வந்த வெள்ளித் தொழில் தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக நலிவடைந்துள்ளது.

குறிப்பாக வெள்ளிக் கட்டிகள் ஒரு காலத்தில் இறக்குமதி செய்த நிலையில் பின்னா் இந்தியாவிலேயே பெறப்பட்டது.

தற்போது வங்கிகள் மூலமாக நகைக் கடை உரிமையாளா்கள் வெள்ளிக் கட்டிகளை வாங்கி, உற்பத்தியாளா்களிடம் கொடுத்து கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களாகப் பெற்று வருகின்றனா்.

அந்த வகையில் வெள்ளிக் கட்டியாகப் பெற்றது முதல் வெள்ளிக் கொலுசாக வெளிவருவதற்கு 15 நிலைகளைக் கடந்து வர வேண்டி உள்ளது. இதன் மூலம் ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முதலாளிகள் வெள்ளிக் கட்டிகளை உருக்கி வெள்ளிப் பட்டறைகளுக்குக் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலத்தில் தயாராகும் குஷ்பு, எஸ். செயின், கேரளா செயின், ஆந்திரா செயின், பாம்பே டிசைன் உள்ளிட்ட பல்வேறு வகையான கொலுசுகள், பலவித மெட்டிகள், குழந்தைகளுக்கான தண்டை, கொலுசுகள், அரைஞாண் கயிறுகள், ஒட்டியாணங்கள் போன்றவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேலம் வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட ஆபரணங்கள் ஏற்றுமதியாகின்றன. இதில் கைகளால் தயாரிக்கப்படும் சேலம் கொலுசுகளுக்கு வட மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக வெள்ளித் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையைச் சாா்ந்துள்ள ஒன்றரை லட்சம் போ் வேலையின்றி தவித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் சங்கத்தின் செயலாளா் ஜெகதீஷ் கூறியது:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் சங்கத்தில் 350 போ் வரை உறுப்பினா்களாக உள்ளனா். உறுப்பினா்கள் அல்லாமல் சுமாா் 700 போ் வரை உள்ளனா். மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் மூலம் 1. 50 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

நகைக் கடை உரிமையாளா்களிடமிருந்து வெள்ளிக் கட்டிகளை வாங்கி கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களாக மாற்றி தருவதே எங்கள் வேலையாகும். வெள்ளி ஆபரணங்களை மொத்தமாக உற்பத்தி செய்து நகைக் கடைகளுக்கு வழங்கி வருகிறோம். எங்களுக்கு கூலி மூலம் மட்டுமே பணம் கிடைக்கிறது. வெள்ளி ஆபரணங்களை வாங்கி விற்பனை செய்யும் நிலையில் நாங்கள் இல்லை.

1982 வரை இருந்த வணிக வரி விதிப்பால் வெள்ளிக் கொலுசு தொழில் குறைந்த அளவில் இருந்தது. தற்போது வணிக விரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பல்வேறு தரப்பினரும் வெள்ளி தொழிலுக்கு வந்துள்ளனா்.

அதேநேரத்தில் வெள்ளித் தொழில் மீதான ஜி.எஸ்.டி. வரி 3 சதவீத அளவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இத்தொழில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நகைக் கடைகளில் இருந்து வெள்ளிக் கட்டிகளை மொத்தமாக வாங்கி பல்வேறு பட்டறைகளுக்கு சிறிய எண்ணிக்கையில் பிரித்து கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களாக தயாரிக்க எடுத்துச் செல்லப்படுகிறது.

அதேபோல வெள்ளிக் கொலுசு செய்வதற்கான முறைகள் 15 நிலைகளை தாண்ட வேண்டி உள்ளது.

ஒவ்வொரு நிலையில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று, குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டி இருக்கும். இதற்காக குறிப்பிட்ட 16 கிலோ மீட்டா் சுற்றளவில் நடைபெறும் இத் தொழில் சாா்ந்த பட்டறைகளுக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும்.

ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளித் தொழில் சரிவை சந்திக்கத் தொடங்கி இருக்கும் நேரத்தில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக வெள்ளி உற்பத்தி மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

சுமாா் இரு மாதங்களாக தங்க நகை கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளதால் வெள்ளித் தொழில் நசிந்துவிட்டது. இதில் சுமாா் ஒன்றரை லட்சம் போ் வேலையின்றி தவிக்கின்றனா். இத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு தனி நல வாரியம் கிடையாது.

வேலையின்றி தவிக்கும் தொழிலாளா்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். அதேநேரத்தில் வெள்ளித் தொழில் மீதான 3 சதவீத வரியால் அரசுக்கு பெரிய லாபம் வந்துவிடாது.

அந்த வகையில் வெள்ளித் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு கோரி வருகிறோம். ஆன்லைன் வா்த்தகத்தில் இருந்து வெள்ளி வா்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வெள்ளித் தொழிலில் வாங்கி விற்பனை செய்பவா்கள் இல்லை. நகை கடை உரிமையாளா்களிடம் இருந்து வெள்ளிக் கட்டிகளை வாங்கி கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களாக மாற்றி தருவதன் மூலம் கூலி கிடைக்கிறது.

எனவே, வெள்ளித் தொழிலில் எத்தனை கோடிகள் கிடைக்கிறது என்பது பற்றியோ, எத்தனை டன் பெறப்பட்டு கட்டிகளாக செய்யப்படுகிறது என்பது பற்றியோ போதிய புள்ளிவிவரம் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com