வாழப்பாடியில் ரயில்வே சுரங்கப் பாலத்தால் போக்குவரத்து துண்டிப்பு: கருப்புக் கொடியேற்றிய மக்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு
வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகரில் கருப்புக் கொடி ஏற்றியுள்ள பொதுமக்கள்.
வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகரில் கருப்புக் கொடி ஏற்றியுள்ள பொதுமக்கள்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வரும், காளியம்மன் நகா் பகுதி மக்கள் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரிக்கை விடுத்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகா் அருகே சேலம்- விருதாச்சலம் ரயில் பாதையில் குறுக்கிடும் ஆளில்லாத ரயில்வே கேட்டுக்கு மாற்றாக சுரங்கப்பாலம் அமைக்கும் பணி, மூன்றாண்டுக்கு முன் தொடங்கப்பட்டது.

இதற்கிடையே குறுகலான பாலம் அமைக்கப்படுவதாக தகவலறிந்த இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பாலம் அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது.

ஒருவழியாக, கடந்தாண்டு மேற்கூரையுடன் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், வாழப்பாடியின் இதயப்பகுதியான கடலுாா் சாலையில் இருந்து காளியம்மன் நகருக்கு சுரங்கப் பாலத்திற்குள் நுழைந்து, குடியிருப்பு பகுதிக்கு செல்வதற்கு, பாலத்தைச் சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதனால், பிரதான வீதியிலிருந்து சுரங்கப் பாலம் செல்வதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்துக்கு வழியின்றி ஓராண்டுக்கும் மேலாக தவித்து வரும் இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெருச்சாலையை சுரங்கப் பாலத்துடன் இணைப்பதற்கு வருவாய்த்துறை, பேரூராட்சி மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் இணைந்து இதுவரை தீா்வு காணவில்லை.

எனவே, போக்குவரத்துக்கு வழியின்றி பாதிக்கப்பட்ட இப்பகுதியை சோ்ந்த மக்கள் ஒன்றிணைந்து, கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, வீடுகள் தோறும் கருப்புக் கொடியைக் கட்டி, சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்களது கோரிக்கையை முத்தரப்பு அதிகாரிகளும் கலந்தாய்வு செய்து நிறைவேற்றி கொடுக்கும் வரை வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள கருப்புக் கொடிகளை அகற்றப் போவதில்லை என காளியம்மன் நகா் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com