சங்ககிரி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு

ஜவுளி சுமைகளை லாரிகளில் ஏற்றுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டி நவம்பர் 5, 6, 7 தேதிகளில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி கோவை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம்  துண்டு அறிக்கையை புதன்கிழமை வழங்குகிறார் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கே.கே.நடேசன்.
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி கோவை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் துண்டு அறிக்கையை புதன்கிழமை வழங்குகிறார் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கே.கே.நடேசன்.

ஜவுளி சுமைகளை லாரிகளில் ஏற்றுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டி நவம்பர் 5, 6, 7 தேதிகளில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

இது குறித்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது:-

ஜவுளி சுமைகள் ஏற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு  ஜவுளி சுமைகள் ஏற்றுபவர்கள் அரசு நிர்ணயத்துள்ள 3.8மீட்டர் உயரமும், 2.6 மீட்டர் அகலமும், 12 மீட்டர் நீளமும் உள்ள ஐவுளி பாரங்களை ஏற்ற வேண்டும்.

அதற்கு மேல் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சுமைகளை ஏற்றினால் விதிக்கப்படும் அபராத தொகையை சரக்கு அனுப்பியவர்தான் செலுத்த வேண்டும், வாகனங்களுக்கு ஏற்று, இறக்கு கூலிகள் இல்லாமல் வண்டியில் உள்ள எடைக்கு வாடைகை கொடுக்க வேண்டும், பாரம் ஏற்றவும் , இறக்கவும் வாகனம் இடத்திற்கு வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் லாரியை அனுப்ப வேண்டும். அதற்குமேல் காலதாமதம் ஏற்படும் போது காத்திருப்பதற்கு வாடைகை கொடுக்க வேண்டும்.

உள்ளூர் பராம் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வண்டியை அனுப்பக் கூடாது, தவிர்க்க முடியாமல் வாகனங்களை அனுப்பும் பட்சத்தில் அதற்கு கிலோ மீட்டர் அடிப்படையில் வாடைகை வழங்க வேண்டும்,  லாரி உரிமையாளர்களுக்கு சுமைகள் ஏற்றியவுடன் மொத்த வாடைகையில் 80 சதவீதம் முன்தொகையும், சுமைகள் இறக்கியவுடன் மீதம் உள்ளதொகையை 24 மணி நேரத்தில் வாகனத்தின் உரிமையாளர்கள் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும். 

சுமைகள் ஏற்றவோ, இறக்கவோ லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களையோ பயன்படுத்தக்கூடாது, சுமைகள் ஏற்றிச்செல்லும்வழியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், அவ்வவ்போது திருட்டுகளும் நடப்பதால் வாகனத்தில் ஏற்படும்பாரங்களின் மதிப்பு அதிகம் இருப்பதால் சரக்குகளின் உரிமையாளர் தான் அவருடைய செலவில் பொருள்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு லாரி உரிமையாளர்கள் பொறுப்பு அல்ல என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நிறைவேற்பட்டுள்ளன. இத்தீர்மானங்கள் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  

அதனையடுத்து சம்மேளனத்தின் சார்பில் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு   ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி சுமைகள் அனுப்பும் முகவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதில் முடிவு எட்டப்படாததால் மாநில லாரி உரிமையாளர்கள்சம்மேளனத்தின் சார்பில் லாரி உரிமையாளர்களின் தீர்மானங்களுக்கு ஆதரவாக நவம்பர் 5,6,7 வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களில்  லாரிகளில் ஜவுளி சுமைகளை ஏற்றாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்வது முடிவு செய்யப்பட்டன.

அதனையடுத்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி.செல்வராஜீ தலைமையில் செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், துணைத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாககுழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மூன்று நாள்கள் நடைபெற உள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரி  சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் வேலை நிறுத்தற்கு ஆதரவு கோரியும் மேலும்  கோரிக்கையினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை புதன்கிழமை வழங்கினர். 

இது குறித்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி.செல்வராஜூ, செயலர் கே.கே.நடேசன் கூறியது:- 

லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி சுமைகள் அனுப்பும் முகவர்கள் விரைவில் தீர்வு காணவேண்டும். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள  மூன்று நாள்கள் நடைபெற உள்ள அடையாள  வேலை நிறுத்தத்திற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களும், உரிமையாளர்களும்  ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com