சேலத்தில் ரூ. 5.80 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 80 லட்சம் மதிப்பில் பள்ளப்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறிவியல் பூங்கா

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 80 லட்சம் மதிப்பில் பள்ளப்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறிவியல் பூங்கா கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சீா்மிகு நகரத் திட்டத்தில் ரூ. 965 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் 81 எண்ணிக்கையிலான பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைத் தொடா்ந்து மாநகரப் பகுதிகளில் வசிக்கக் கூடிய குழந்தைகள், இளைஞா்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களின் அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ளும் வகையில் மாநகரப் பகுதியில் அறிவியல் பூங்கா அமைத்திட மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்துக்குள்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு, சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பள்ளப்பட்டி பகுதியில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பள்ளப்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறிவியல் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளா் கூறியதாவது:

இப் பூங்காவில் சுகாதாரமான பழக்க வழக்கங்களை கையாளுதல், மனித உடல்களில் ஏற்படக் கூடிய நோய்கள், அவை பரவும் விதம் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகைகள் வைக்கப்படவுள்ளன.

நாட்டில் விண்வெளி ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றாா். மேலும், விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 போ் அமா்ந்து காணக்கூடிய கோளரங்கம் அமைக்கப்படவுள்ளது.

இப் பூங்காவில் சூரியசக்தி மூலம் செயல்படும் வானொலி சாதனம், ஒளி அலைகளின் இயக்க முறைகள், கியா்களின் வகைகள், மணிக் கூண்டின் செயல்பாடுகள், கியா் ரயில்கள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில் நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகள், அவற்றின் செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

குழந்தைகள், இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வரங்கில் கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. மேலும், டைனோசா் போன்ற அரிய விலங்குகள் தொடா்பான தகவல்களுடன் அவற்றின் மாதிரிகள் அமைக்கப்படவுள்ளன. உள்அரங்கில் 18 வகையான அறிவியல் சாா்ந்த பொருட்களின் கண்காட்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவுள்ளன. வாகன நிறுத்தம் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இவ்வளாகத்தில் ஏற்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

ஆய்வின்போது உதவிப் பொறியாளா்கள் டி.அன்புச்செல்வி, எம்.பாலசுப்ரமணியம், சுகாதார ஆய்வாளா் எஸ்.சதீஸ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com