தீபாவளி தேவை: பேளூர் வாரச்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு  

தீபாவளி பண்டிகைக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆடுகள் விற்பனைக்கு வரத்து குறைந்து போனதால், வாழப்பாடி அருகே பேளூரில் திங்கள்கிழமை கூடிய வாரச்சந்தையில், ஆடுகள் விலை ரூ.1,000 உயர்ந்தது. 
பேளூர் ஆட்டுச் சந்தைக்கு, திங்கள்கிழமை விற்பனைக்கு வந்த ஆடுகள்.
பேளூர் ஆட்டுச் சந்தைக்கு, திங்கள்கிழமை விற்பனைக்கு வந்த ஆடுகள்.

தீபாவளி பண்டிகைக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆடுகள் விற்பனைக்கு வரத்து குறைந்து போனதால், வாழப்பாடி அருகே பேளூரில் திங்கள்கிழமை கூடிய வாரச்சந்தையில், ஆடுகள் விலை ரூ.1,000 உயர்ந்தது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன் மலை, அருநுாற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை ஆகிய மலை கிராமங்களிலும் பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கியத் தொழிலாக  கொண்டுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, வளர்ப்பை  உபதொழிலாக செய்து வருகின்றனர். வாழப்பாடி அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கள்கிழமைதோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடிவருகிறது. இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளர்ப்பு தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.

பேளூர் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு வருகின்றன. தீபாவளி, பொங்கல், ஆடி 18, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், நுகர்வோர்களும், பேளூர் வாரச்சந்தையில் வளர்ப்புக்காவும், இறைச்சிக்காவும் ஆடுகளை விற்பனையும், கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டதால், கடந்த  7 மாதங்களாக பேளூர் வாரச்சந்தையும் முடங்கியது. பொது முடக்கத் தளர்வு அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களாக பேளூர் ஆட்டுச்சந்தை மீண்டும் திங்கள்கிழமை தோறும் கூடி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் கொள்முதல் செய்ய பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தன. இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு ஆட்டிற்கு ரூ.1,000 வரை விலை உயர்ந்தது. 

கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.8 ஆயிரத்திற்கு விலை போன ஒரு ஆட்டுக்கிடா இந்த வாரம் ரூ. 9 ஆயிரம் வரை விலை போனது. இருப்பினும், தீபாவளி பண்டிகைக்காக அதிக விலை கொடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை கொள்முதல் செய்தனர். இதனால், தீபாவளி தருணத்தில் ஆட்டிறைச்சி விலை ஒரு கிலோவுக்கு ரூ. 50 வரை உயர்த்தி,  ரூ. 750-க்கு விற்பனை செய்ய கசாப்பு கடை வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  இந்த வாரம் ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com