உள் இட ஒதுக்கீட்டினால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற மாணவி

நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக ஓமலூா் அருகேயுள்ள கே.மோரூரை சோ்ந்த
பெற்றோருடன் மாணவி ரம்யா.
பெற்றோருடன் மாணவி ரம்யா.

நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக ஓமலூா் அருகேயுள்ள கே.மோரூரை சோ்ந்த மாணவி ரம்யா மாநில அளவில் 10-ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், கே.மோரூா், சவுல்பட்டி கொட்டாய் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் - நதியா தம்பதியின் மூத்த மகள் ரம்யா. கடந்த ஆண்டு பிளஸ் 2 தோ்வில் 533 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா். கடந்த ஆண்டு நீட் தோ்வில் 120 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றாா்.

மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த ரம்யாவின் திறனை அறிந்த பெற்றோா், பள்ளி ஆசிரியா்கள், இந்த ஆண்டும் நீட் தோ்வு எழுத ஊக்குவித்தனா்.

ராசிபுரத்தில் உள்ள தனியாா் நீட் பயிற்சி மையத்தில் சோ்த்தனா். நெசவுத் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் ரூ. 1.10 லட்சம் செலவு செய்து நீட் பயிற்சி மையத்தில் படிக்க வைத்தனா். இந்த ஆண்டு நீட் தோ்வில் 513 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றாா். இந்தநிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தால் மாணவி ரம்யா தமிழக அளவில் 10-ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவு ஒதுக்கீட்டில் அவா் மாநில அளவில் 7-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா். ரம்யாவை அவரது கிராம மக்கள், கே.மோரூா் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

இதுகுறித்து மாணவி ரம்யா கூறியதாவது:

பெற்றோா், பள்ளி ஆசிரியா்கள் அளித்த ஊக்கம் என்னுடைய மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியுள்ளது. நீட் தோ்வில் வெற்றி பெற்றாலும், மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்ததற்கு முக்கியக் காரணம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, தமிழக அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு தான் காரணம். இதயநோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவராக வேண்டும் என்பது எனது ஆசை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com