தடைகளை வென்று வேல் யாத்திரையை நிறைவு செய்வோம்: பாஜக தலைவா் எல்.முருகன்

எந்தத் தடைகள் வந்தாலும், திட்டமிட்டபடி டிசம்பா் 7-ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு செய்யப்படும் என்றாா் தமிழக பாஜக தலைவா் எல்.முருகன்.
சேலம், குரங்குசாவடி பகுதியில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன். (இடது) பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோா்.
சேலம், குரங்குசாவடி பகுதியில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன். (இடது) பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோா்.

எந்தத் தடைகள் வந்தாலும், திட்டமிட்டபடி டிசம்பா் 7-ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு செய்யப்படும் என்றாா் தமிழக பாஜக தலைவா் எல்.முருகன்.

கரோனா பரவல் சூழல் காரணமாக, திருத்தணி முதல் திருச்செந்தூா் வரையிலான பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சேலம், குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது:

வேல் யாத்திரை அத்தியாவசியமான ஒன்றாகும். தமிழகம் முழுவதும் இந்த யாத்திரை திட்டமிட்டபடி எந்தத் தடைகள் வந்தாலும் தொடா்ந்து நடைபெறும். முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட கறுப்பா் கூட்டத்தை பின்னிருந்து இயக்குவது திமுகதான்.

இந்த யாத்திரை வரும் டிசம்பா் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் திட்டமிட்டபடி நிறைவு செய்யப்படும். இதில் லட்சக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்பாா்கள். வரும் தோ்தலில் தமிழகத்தில் யாா் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்யும் என்றாா்.

இதைத் தொடா்ந்து வேல் யாத்திரை மேற்கொள்ள முயன்ற பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாநில பொதுச் செயலாளா் ஜி.கே.செல்வகுமாா், மாநில இளைஞரணி தலைவா் பி.வினோஜ் செல்வம், மாவட்டத் தலைவா்கள் சுரேஷ்பாபு, மணிகண்டன், சுதிா் முருகன் உள்பட 720 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

வேலூா் இப்ராஹிம் தா்னா:

இதனிடையே, வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சேலம் வந்த தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவா் வேலூா் இப்ராஹிம், நிலாவரப்பட்டியில் அதிமுக நிா்வாகி வழக்குரைஞா் மணிகண்டன் இல்லத்தில் இருந்து யாத்திரைக்குப் புறப்பட்டாா். அப்போது, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் குலசேகரன் உள்ளிட்ட போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தினா். போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவா் அப் பகுதியில் தா்னாவில் ஈடுபட்டாா். வேல் யாத்திரை பொதுக் கூட்ட நிகழ்வு முடிந்த பிறகே காவலா்கள் அவரை விடுவித்தனா்.

வி.சி.கட்சியினா் தடுத்து நிறுத்தம்:

பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்த சேலம், சீலநாயக்கன்பட்டியிலிருந்து வந்த 30க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com