கரியகோவில்- கைக்கான் வளைவுவாய்க்கால் திட்டப் பணி தொடக்கம்

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கரியகோவில் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கரியகோவில் - கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டப் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்.
கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கரியகோவில் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கரியகோவில் - கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டப் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையின் வடமேற்குப் பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் முக்கிய உபநதியான கரியகோவில் ஆற்றின் குறுக்கே, கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், இரு மலைக்குன்றுகளுக்கு இடையே கரியகோவில் அணை அமைந்துள்ளது.

1982 இல் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்கு பிறகு 1993 இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் இந்த அணை திறக்கப்பட்டது. 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாகவே அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் போதிய மழையில்லாததால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளாக கல்வராயன் மலைப்பகுதியில் போதிய மழையில்லததால் அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

கல்வராயன் மலையில் சேலம் மாவட்ட எல்லையான பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்குநாடு ஊராட்சிக்கு உள்பட்ட கைக்கான் வளைவு கிராமத்தில் உற்பத்தியாகும் நீரோடை, தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்திலுள்ள கோமுகி அணையில் சென்று சேருகிறது.

கரியகோவில் நீரோடையைவிட, கைக்கான் வளைவு நீரோடையில் கூடுதல் தண்ணீா் செல்வதால், கோமுகி அணை பெரும்பாலான ஆண்டுகளில் நிரம்பிவிடுகிறது. அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

எனவே, கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்கு கால்வாய் அமைத்து, கரியகோவில் நீரோடையில் திருப்பிவிட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அணைப்பாசன விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

கரியகோவில் ஆற்றின் குறுக்கே அணை அமைத்து மழைக்காலத்தில் வழிந்தோடி வரும் தண்ணீா் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆற்றுப்பாசன அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகள் மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பிறகே கரியகோவில் வெள்ளாற்றில் வரும் நீரை அணையில் தேக்கி வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டு, அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து 2019 இல் முதல் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து கரியகோவில் ஆற்றில் வரும் தண்ணீரை அணையில் தேக்காமல் ஆற்றுப்படுகை அணைக்கட்டு மற்றும் ஏரிகளுக்காக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. போதிய நீா்வரத்து இல்லாததால் ஏரிகளும் நிரம்பவில்லை. இரு ஆண்டாக அணையும் அடியோடு வறண்டு பயன்பாடற்று வெறிச்சோடி கிடக்கிறது.

எனவே, இதுகுறித்து அறிக்கை தயாரித்து சமா்பித்த பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு பிரிவு அதிகாரிகள், கரியகோவில் பாசன விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்கு கால்வாய் அமைத்துச் சென்று கரியகோவில் நீரோடை வழியாக அணைக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு கடந்தாண்டு முடிவு செய்தது.

இத் திட்டத்துக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்துதல், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 7.30 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, தனியாா் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

மொத்தம் 500 மீட்டா் நீளம் கொண்ட இந்த கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டத்தில் கைக்கான் வளைவு நீரோடையில் தடுப்பணையும் தலைமை மதகும் அமைத்து, நீரோடையில் செல்லும் ஏறக்குறைய இரண்டாயிரம் மில்லியன் கன அடி தண்ணீரில் உபரியாகும் 60 மில்லியன் கனஅடியை தண்ணீரை மட்டும் 500 மீட்டா் நீள வாய்க்காலில் 9 கிணற்று தொட்டிகள் (டிராப்) அமைத்து கரியகோவில் நீரோடை வழியாக பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணைக்கு தண்ணீா் கொண்டு செல்ல திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.

இத் திட்டப் பணிக்கான தொடக்க விழா சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கெளதமன், ஆத்துாா் எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஆத்துாா் ஆா்.டி.ஓ, துரை, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

10 ஆண்டுகால கோரிக்கையான கரியகோவில் ஆறு - கைக்கான் வளைவுக் கால்வாய்த் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதால், கரியகோவில் அணை வாய்க்கால் பாசன விவசாயிகள் மட்டுமின்றி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார கிராமங்களில் ஆறு, ஏரிப்பாசன விவசாயிகளும், ஆற்றுப்படுகை கிராம மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com